திரைப்பட நுழைவுச்சீட்டுகளை விற்றுத் தந்தால் தரகுத் தொகை தருவதாக ஏமாற்றும் வேலை மோசடி குறித்துக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்கள் அதுகுறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று திங்கட்கிழமை (பிப்ரவரி 21) வெளியிட்ட ஆலோசனை அறிக்கையில் அது கேட்டுக்கொண்டது. சென்ற மாதத்தில் இருந்து இதுவரை அத்தகைய 189 மோசடிச் சம்பவங்களைக் கண்டறிந்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.
மோசடிக்காரர்கள் முதலில் குறுஞ்செய்தி மூலம் நட்பு அழைப்பு விடுப்பார்கள். பின்னர் திரைப்பட நுழைவுச்சீட்டு விற்பனையை அதிகரிக்க உதவுவதன் மூலம் தரகுத் தொகை ஈட்ட வகைசெய்வதாகக் கூறுவார்கள்.
அதற்கு ஒப்புக்கொண்டால், இணையத்தள முகவரி ஒன்று 'வாட்ஸ்அப்' மூலம் அனுப்பிவைக்கப்படும். அதில் கணக்கு தொடங்கி, பணம் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுவர். பிறகு, அறிமுகமற்றவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும்படி வலியுறுத்தப்படுவர்.
வேலையை முடித்தவுடன், மோசடி இணையத் தளத்தில் உருவாக்கப்பட்ட கணக்கில் அதற்கான தொகை சேர்க்கப்பட்டதாகவும் காட்டும். ஆனால் அந்தப் பணத்தை எடுக்க இயலாமல்போன பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்தனர் என்று காவல்துறை தெரிவித்தது.
குறைவான உழைப்புக்கு அதிகமான ஊதியம் தரும் வேலைகளை ஏற்க வேண்டாம் என்றும் சரிபார்க்கப்படாத தளங்களில் இருந்து செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அது அறிவுறுத்தியது. அறிமுகமற்ற யாருக்கும் ஒருபோதும் பணம் அனுப்பவேண்டாம் என்றும் காவல்துறை ஆலோசனை கூறியது.
அத்தகைய குற்றங்கள் தொடர்பான மேல்விவரங்களுக்கு, 1800-255-0000 என்ற 24 மணி நேரச் சேவை வழங்கும் எண்ணை நாடலாம். அவசர உதவிக்கு 999 என்ற எண்ணையும் அழைக்கலாம்.
அல்லது மோசடித் தடுப்புக்கான 24 மணி நேரத் தொலைபேசிச் சேவையை 1800-722-6688 என்ற எண்ணில் பெற்றுக்கொள்ளலாம்.


