காவல்துறை அதிகாரிபோல நடித்தது உட்பட கூட்டுரிமை வீட்டு பாதுகாவலர் மீது மூன்று குற்றச்சாட்டுகள்

காவல்துறை அதிகாரிபோல நடித்தது உட்பட கூட்டுரிமை வீட்டு பாதுகாவலர் மீது மூன்று குற்றச்சாட்டுகள்

1 mins read
66168431-ca78-4489-a32e-53d88c548b95
படம்: கூகல் வரைபடம் -

கூட்டுரிமை வீடு ஒன்றில் பணியில் ஈடுபட்டிருந்த மூத்த பாதுகாவலர் ஒருவர், சீருடை அணியாத காவல்துறை அதிகாரிபோல நடித்து ஏமாற்றிய சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

33 வயதாகும் கணேசன் குணசேகரன் கையூட்டு பெற்றுக்கொண்டு, 'டிரேஸ்டுகெதர்' செயலியைப் பயன்படுத்தாமலே கூட்டுரிமை வீட்டுக்குள் செல்ல ஓர் ஆடவரை அனுமதித்தாகவும் கூறப்பட்டது.

அத்துடன், அந்த ஆடவரை மிரட்டி $10,000 பணம் பறித்ததாகவும் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.

வெஸ்ட் கோஸ்ட்டில் அமைந்திருக்கும் சீஹில் கூட்டுரிமை வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகவும் அங்குள்ள கழிப்பறையில் மாணவருடன் பாலியல் உறவு கொண்டதாகவும் விசாரணை நடத்தப்போவதாகக் கூறி அந்த ஆடவரிடம் கணேசன் பணம் பறித்தார்.

சிங்கப்பூர் நிரந்தரவாசியான கணேசன்மீது திங்கட்கிழமை (பிப்ரவரி 21) மாவட்ட நீதிமன்றத்தில், காவல்துறை அதிகாரிபோல் வேடமிட்டது, ஊழல், மிரட்டிப் பணம் பறித்தது ஆகிய மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

மலேசியரான அவர், சென்ற ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி, பாதிக்கப்பட்ட ஆடவரிடம் தாம் சீருடை அணியாத காவல்துறை உயரதிகாரி என்று சொன்னதாகக் கூறப்பட்டது.

மார்ச் 23ஆம் தேதி கணேசன் மீண்டும் நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்குவார்.

காவல்துறை அதிகாரியைப்போல் வேடமிட்டதற்கு $2,500 வரையிலான அபராதமோ, ஆறு மாதம் வரையிலான சிறைத்தண்டனையோ, இரண்டுமோ விதிக்கப்படலாம்.

மற்ற இரு குற்றச்சாட்டுகளுக்கும் மொத்தம் பத்தாண்டு வரையிலான சிறைத்தண்டனை, $100,000 வரையிலான அபராதம், பிரம்படி ஆகியவை விதிக்கப்படலாம்.