வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புகளில் அமைந்திருக்கும் கடைகளுக்குப் புத்துயிர் ஊட்டுவது குறித்து பொதுமக்கள் கருத்துரைக்கும் கூட்டத்தில் பங்கேற்றவர்கள், மின்னிலக்கமயமாதல் வருங்காலத்திற்கு ஏற்ற அம்சம் என்று கூறியுள்ளனர்.
இருப்பினும், வயதான கடை உரிமையாளர்கள் அதனால் பின்தங்கக்கூடும் என்ற கவலையையும் அவர்கள் முன்வைத்தனர்.
குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள கடைகள் துடிப்புடனும் காலத்துக்கு ஏற்ற வகையிலும் விளங்கும் அதேவேளையில், சமூகப் பிணைப்புகளை வலுப்படுத்திக்கொள்வது குறித்த கலந்துரையாடல் திங்கட்கிழமை (பிப்ரவரி 21) இடம்பெற்றது.
அதில் கலந்துகொண்ட தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, அத்தகைய கடைகளில் புத்தாக்கத் தீர்வுகளை நடைமுறைப்படுத்தும் வேளையில், அவற்றின் பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதும் முக்கியம் என்று குறிப்பிட்டார்.
"சீனப் பாரம்பரிய மருந்தகங்கள், வழிபாட்டுத் தாள் விற்பனைக் கடைகள் போன்றவை குறையத் தொடங்கியுள்ளன. ஏனெனில் இளைய தலைமுறையினருக்கு அவற்றில் அதிக நாட்டமில்லை. இருப்பினும், அவை ஒரேயடியாக மறைந்துவிட்டால் இளைய தலைமுறைக்கும் அது நட்டமே," என்றார் அவர்.
"குடியிருப்புப் பேட்டைகளில் பல்வேறு வகைக் கடைகள் கலவையாக அமைந்திருப்பதை உறுதிசெய்வதில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் பங்காற்ற வேண்டும். 'பசார் மலாம்' எனப்படும் இரவுநேரச் சந்தைகளை மீண்டும் ஊக்குவிக்கலாம். சமூக வலைத்தளங்களில் குடியிருப்புப் பேட்டை கடைகளைப் பிரபலப்படுத்தலாம்," எனப் பங்கேற்பாளர்கள் பல்வேறு யோசனைகளை முன்வைத்தனர்.
குடியிருப்புப் பேட்டை கடைகளுக்குப் புத்துயிரூட்டும் வழிவகைகள் குறித்த இணையக் கருத்தாய்வை தேசிய வளர்ச்சி அமைச்சு பிப்ரவரி 3ஆம் தேதி தொடங்கியது. இதுவரை சுமார் 400 பேர் அதில் கலந்துகொண்டுள்ளனர். கடை உரிமையாளர்கள், வாடகைதாரர்கள், ஊழியர்கள், குடியிருப்பாளர்கள் என ஈராயிரத்துக்கும் அதிகமானோரிடம் அமைச்சு நேர்காணல்களையும் நடத்தியுள்ளது.


