பயங்கரவாதத்திற்கு நிதியாதரவு வழங்கிய கட்டுமான ஊழியருக்குச் சிறைத்தண்டனை

பயங்கரவாதத்திற்கு நிதியாதரவு வழங்கிய கட்டுமான ஊழியருக்குச் சிறைத்தண்டனை

2 mins read
1aa0db47-3ac9-4a3e-8155-03cdc64e0597
அகமது ஃபைசலுக்கு ஈராண்டுகளும் எட்டு மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. படம்: உள்துறை அமைச்சு -

சிரியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியாதரவு அளித்த பங்ளாதேஷ் நாட்டவருக்கு ஈராண்டுகளும் எட்டு மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அகமது ஃபைசல், 27, எனும் இந்த ஆடவர், பயங்கரவாத (நிதியாதரவை ஒடுக்குதல்) சட்டத்தின்கீழ் தன்மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

தண்டனை விதிக்கப்படுமுன் இவர்மீதான மேலும் பத்துக் குற்றச்சாட்டுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன. இந்தச் சட்டத்தின்கீழ் ஒருவர் எதிர்நோக்கிய ஆக அதிகக் குற்றச்சாட்டுகள் இவைதான் என்று கூறப்பட்டது.

கட்டுமான ஊழியராக இங்கு வேலைசெய்து வந்த அகமது $900 முதல் $1,200 வரை மாத ஊதியமாக ஈட்டி வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஃபேஸ்புக் வழியாகப் புனிதப் போர் பற்றியும் சிரியாவில் நடந்த உள்நாட்டுப் போர் குறித்தும் அகமது முதன்முதலில் அறிந்தார். அதனைத் தொடர்ந்து, சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு, இஸ்லாமிய அரசை நிறுவ இவர் தொடக்கத்தில் ஆதரவு அளித்தார்.

பல்வேறு ஃபேஸ்புக் கணக்குகள், தற்காலிக மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி, புனிதப்போர் பற்றி அகமது பதிவிட்டார்.

சிரியா சென்று, அந்நாட்டு அரசைக் கவிழ்க்க ஐஎஸ் அமைப்பிற்கு உதவுவது குறித்தும் இவர் பரிசீலித்தார். ஆயினும், சிரியா செல்ல போதிய பணம் இல்லாததாலும் தாய்நாட்டில் உள்ள குடும்பத்திற்கு ஆதரவு வழங்க வேண்டி இருந்ததாலும் அந்த எண்ணத்தைக் கைவிட்டார்.

பின்னர், ஐஎஸ் அமைப்பினர் அப்பாவி மக்களைக் கொன்றதற்கு முஸ்லிம் கல்விமான்கள் கண்டித்த காணொளிகளைக் கண்டபிறகு, அவ்வமைப்பின் செயல்களால் அகமது ஏமாற்றமடைந்தார்.

அதன்பின் சிரியாவில் செயல்பட்ட ஹயாத் தஹ்ரீர் அல் ஷாம் (எச்டிஎஸ்) எனும் இன்னொரு பயங்கரவாத அமைப்பை இவர் ஆதரிக்கத் தொடங்கினார்.

இருந்தபோதும், சிங்கப்பூரில் ஆயுதங்களைப் பயன்படுத்த அகமது எண்ணம் கொண்டிருக்கவில்லை என்றும் பிரச்சினையில் இருந்து விலகியிருக்கவும் இங்கு வேலை செய்வதன்மூலம் பங்ளாதேஷில் உள்ள தன் குடும்பத்தைத் தொடர்ந்து ஆதரிக்கவும் விரும்பினார் என்றும் சொல்லப்பட்டது.

கடந்த 2019 நடுப்பகுதியில் இருந்து, பங்ளாதேஷ் வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் ஃபேஸ்புக் பக்கத்தை இவர் பின்தொடர்ந்தார். அந்த மருத்துவர் சிரியாவின் இட்லிப்பில் பணிபுரிந்து வந்ததாகக் கூறப்பட்டது.

சிரிய அரசாங்கம் அகற்றப்பட வேண்டும் என்று கூறி, அதற்குப் போராடிய எச்டிஎஸ் அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து அம்மருத்துவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். காயமுற்ற எச்டிஎஸ் போராளிகளுக்குச் சிகிச்சை அளிக்க நிதியுதவி வழங்கக் கோரியும் அவர் காணொளிகளை வெளியிட்டு, கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து, எச்டிஎஸ் அமைப்பிற்குச் சென்றுசேரும் என நம்பி, அகமது கடந்த 2020 பிப்ரவரி-அக்டோபர் காலகட்டத்தில் 15 முறை மொத்தம் 891.98 வெள்ளியை அனுப்பிவைத்தார்.

கைதுசெய்யப்பட்டபோது அகமதிடம் ஏழு கத்திகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆயினும், அவற்றை பங்ளாதேஷில் மட்டுமே பயன்படுத்த இருந்ததாக விசாரணையின்போது இவர் சொன்னார்.