செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
99db4264-10aa-4e68-b990-b73d7267c5f6
-

தொற்று: மருத்துவமனையில் 1,523 பேர்

கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 1,523 பேர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது நேற்று முன்தின நிலவரம். கிருமித் தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து 16வது நாளாக 1,000க்கு மேலாக இருந்து வருகிறது. அவர்களுள் 39 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்; 195 பேருக்குச் செயற்கைச் சுவாச உதவி தேவைப்படுகிறது. நேற்று முன்தினம் புதிதாக 15,283 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதற்கு முந்திய நாளில் இந்த எண்ணிக்கை 15,836ஆகப் பதிவானது. உள்ளூரில் புதிதாகப் பாதிக்கப்பட்டோரில் 12,113 பேருக்கு ஏஆர்டி பரிசோதனை மூலம் தொற்று உறுதிசெய்யப் பட்டது. மேலும் 2,958 பேரை கொரோனா தொற்றியிருந்தது பிசிஆர் பரிசோதனை மூலம் தெரியவந்தது. வெளிநாட்டில் இருந்து வந்தோரில் 212 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தது சோதனைகளில் கண்டறியப்பட்டது. வாராந்திர கொவிட்-19 தொற்று உயர்வு விகிதம் 1.59ஆக இருந்தது. நேற்று முன்தின நிலவரப்படி, சிங்கப்பூரில் இதுவரை 582,638 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுவிட்டனர்; 945 பேர் இறந்துவிட்டனர். தகுதியுள்ளோரில் ஏறக்குறைய 94 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுவிட்டனர்; 66 விழுக்காட்டினர் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிகள் ஒளிபரப்பு உரிமையைப் பெற்ற ஸ்டார்ஹப்

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் அடுத்த பருவத்தில் இருந்து ஆறாண்டுகளுக்கு இங்கிலிஷ் பிரிமியர் லீக் (இபிஎல்) காற்பந்துப் போட்டிகளை ஒளிபரப்ப உடன்பாடு செய்துகொண்டுள்ளதாக கட்டணத் தொலைக்காட்சி சேவை வழங்குநரான ஸ்டார்ஹப் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, 12 பருவங்களுக்குப் பிறகு இபிஎல் போட்டிகள் ஒளிபரப்பு உரிமை மீண்டும் ஸ்டார்ஹப்புக்குக் கிட்டியுள்ளது. இந்த 12 பருவங்களிலும் சிங்கப்பூரில் இபிஎல் போட்டிகளின் அதிகார பூர்வ ஒளிபரப்பாளராக சிங்டெல் டிவி இருந்து வருகிறது. அதே நேரத்தில், கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து நடப்பில் உள்ள 'கிராஸ் கேரேஜ்' ஏற்பாடும் தொடரும் எனத் தெரிகிறது. இந்த ஏற்பாட்டின்மூலம் மற்ற சிங்டெல் டிவி நிறுவனமும் ஸ்டார்ஹப்பிடம் இருந்து இபிஎல் போட்டி காணொளிகளைப் பெற்று, ஒளிபரப்ப முடியும்.

இரு புதிய ரயில்கள் வந்துசேர்ந்தன

இரண்டு புதிய பெருவிரைவு ரயில்கள் சிங்கப்பூருக்கு வந்து சேர்ந்தன. இப்போது கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு ரயில் பாதைகளில் இயக்கப்படும் 106 ரயில்கள் மாற்றப்படவுள்ளன. அவ்வகையில், தலா ஆறு பெட்டிகளைக் கொண்ட அவ்விரு ரயில்களும் முதலாவதாக நேற்று ஜூரோங் துறைமுகத்தை வந்தடைந்தன. கடந்த ஆண்டில் பிரான்சின் ஆல்ஸ்டம் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட 'பம்பார்டியர் டிரான்ஸ் போர்ட்டேஷன்' நிறுவனம் அவ்விரு மெட்ரோ ரயில்களையும் அனுப்பிவைத்துள்ளது. அவ்விரு ரயில்களும் ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டு, சீனாவின் சாங்சுன்னில் தயாரிக்கப்பட்டு, பொருத்தப்பட்டன. இவ்வாண்டு இறுதியில் சேவையில் அவை இணைக்கப்படும். அதற்குமுன் அவை கடுமையான பல சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தனது ஃபேஸ்புக் பக்கம் வழியாகத் தெரிவித்து இருக்கிறது. அவ்வப்போதைய ரயில் பயணத் தகவல்களைக் காட்டும் 'எல்சிடி' திரைகள் உள்ளிட்ட பயணிகளுக்கு உகந்த அம்சங்களையும் முன்கூட்டிய பராமரிப்பிற்கு உதவும் ஒருங்கிணைந்த கண்காணிப்பு அம்சங்களையும் புதிய ரயில்கள் கொண்டிருக்கும்.