தடுப்பூசிகள், கூடுதல் தடுப்பூசிகள், நோய்த் தீர்வியல் - இம்மூன்றும்தான் கொவிட்-19 கிருமியையும் அதன் திரிபுகளையும் எதிர்கொள்வதில் சிங்கப்பூரின் உத்தி என்று நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்து இருக்கிறார்.
புதிய திரிபுகள் தோன்றினாலும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதில் சிங்கப்பூரின் இவ்வுத்தி புதிய பாதையை வகுத்துக்கொடுக்கும் என்று திரு வோங் கூறியுள்ளார்.
அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாலும் பெரும்பாலான கொரோனா நோயாளிகளிடம் இலேசான அறிகுறிகள் காணப்படுவதாலும், இப்போதைய ஓமிக்ரான் கொரோனா அலையை எதிர்கொள்வதில் சிங்கப்பூர் முழு நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். சிஎன்பிசி ஊடகத்திற்கு அளித்த நேர்காணலின்போது அமைச்சர் வோங் இவ்வாறு தெரிவித்தார்.
இப்போதைக்குத் தொற்று பாதிப்பு சாதனை அளவில் இருக்கும் வேளையில், அது நாளொன்றுக்கு 20,000க்குமேல் போகலாம் என்றும் அவர் சொன்னார்.
ஆயினும், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக திரு வோங் குறிப்பிட்டார்.
பராமரிப்பு தேவைப்படும் கொவிட்-19 நோயாளிகள் இன்னும் இருப்பதால் மருத்துவமனைகளும் தனியார் மருந்தகங்களும் பரபரப்பாக இயங்குவதாகக் கூறிய அவர், ஆனாலும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் நிலைமை மோசமாக உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இல்லாதது நல்ல விஷயம் என்றும் சொன்னார்.
நான்காவது தடுப்பூசி தேவைப்படுமா என்பது குறித்து அறிவியலாளர்களுடன் இணைந்து இன்னும் ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் வோங் கூறினார்.

