கொவிட்-19 கட்டுப்பாடுகளை மீறியதாகக் கூறி, நான்கு வெவ்வேறு சம்பவங்களில் தொடர்புடைய 34 பேர்மீது குற்றம் சுமத்தப்படவுள்ளது. கடந்த 2020 அக்டோபர் மாதத்திற்கும் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அச்சம்பவங்கள் இடம்பெற்றன.
அவர்களில் 31 வயதான ஆடவர் ஒருவர்மீது, உரிமமின்றி அலுவலகத்தில் 'கேடிவி' கேளிக்கை நிலையத்தை நடத்தியதாகவும் ஆதரவாளர்களுக்கு மதுபானம் வழங்கியதாகவும் குற்றஞ்சாட்டப்படும்.
மேலும், 20 முதல் 38 வயதிற்கு உட்பட்ட ஆடவர் அறுவர் சூதாட்டக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவர் என்று காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
கடந்த 2020 அக்டோபர் 23ஆம் தேதி, அங் மோ கியோ அவென்யூ 5ல் உள்ள ஒரு தொழிற்பேட்டையில் அதிரடியாகச் சோதனையிட்டபோது, அங்கு ஆண்கள் அறுவரும் பெண்கள் எழுவரும் ஒன்றுகூடி, மது அருந்தியதைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
20 முதல் 42 வயதிற்குட்பட்ட அந்த 13 பேர்மீதும், கொவிட்-19 கட்டுப்பாடுகளின்கீழ் தடையை மீறி ஒன்றுகூடியதாகத் தனித்தனியாகக் குற்றம் சுமத்தப்படும்.
கடந்த 2021 ஜூன் 15ஆம் தேதி இடம்பெற்ற இன்னொரு சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 11 பேர்மீதும் இதுபோன்ற குற்றச்சாட்டு சுமத்தப்படும்.
உட்லண்ட்ஸ் தொழிற்பேட்டையில் உள்ள ஓர் அலுவலகத்தில், உரிமம் பெறாமல் நடத்தப்பட்ட 'கேடிவி' போன்ற கேளிக்கை நிலையத்தில் ஆடவர் எண்மரும் பெண்கள் மூவரும் ஒன்றாகப் பழகி, மது அருந்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
கொவிட்-19 கட்டுப்பாடுகளின்கீழ் அந்தத் தொழில் வளாகத்தை மூடியிருக்க வேண்டிய நிலையில், தடையை மீறியதாகவும் சட்டவிரோதமாக அதனை நடத்தியதாகவும் மதுபானம் விநியோகித்ததாகவும் அதன் 31 வயது நடத்துநர்மீது குற்றஞ்சாட்டப்படும்.
செல்லத்தக்க உரிமம் இல்லாமல் பொதுக் கேளிக்கை நடவடிக்கைகளை வழங்கிய குற்றம் மெய்ப்பிக்கப்பட்டால், அவருக்கு $20,000 வரை அபராதம் விதிக்கப்படும். அத்துடன், உரிமமின்றி மதுபானம் வழங்கியதற்காக அவருக்கு $20,000 வரை அபராதமும் மீண்டும் குற்றம் புரிந்தமைக்காக மூன்று மாதம்வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி ஸியோன் சாலையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் காவல்துறையினர் அதிரடிச் சோதனை மேற்கொண்டபோது, 20 முதல் 31 வயதிற்குட்பட்ட ஆடவர் எழுவர் கொவிட்-19 கட்டுப்பாடுகளை மீறி ஒன்றுகூடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களில் ஐவர்மீது சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்படும்.
இதேபோல், அங் மோ கியோ அவென்யூ 1ல் உள்ள ஒரு வீட்டில் செப்டம்பர் 16ஆம் தேதி சோதனை நடத்தியபோது, அங்கு 14 பேர் ஒன்றுகூடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கொவிட்-19 கட்டுப்பாடுகளின்கீழ் ஒன்றுகூடுவதற்கான தடையை மீறியதாக 38 வயது 50 வயதான ஆடவர் இருவர்மீது குற்றஞ்சாட்டப்படவுள்ளது. 38 வயதான ஆடவர் சட்டவிரோதமாகச் சூதாடிய குற்றத்தையும் எதிர்நோக்குவார்.
கொவிட்-19 கட்டுப்பாடுகளை மீறியது உறுதியானால், ஆறு மாதம்வரை சிறை, $10,000 வரை அபராதம் அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

