$193,000 மதிப்பிலான மடிக்கணினிகளைப் பெற்றுக்கொண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை ஏமாற்றிய இளையர்

$193,000 மதிப்பிலான மடிக்கணினிகளைப் பெற்றுக்கொண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை ஏமாற்றிய இளையர்

2 mins read
bf286c6d-fa84-4dcd-bb32-c4117d575517
படம்: ராய்ட்டர்ஸ் -

சிங்கப்பூர் இளையர் ஒருவர், 2017ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை ஏமாற்றி, $193,000 மதிப்பிலான 56 மடிக்கணினிகளைப் பெற்றதன் தொடர்பில், நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 22) நான்கு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

நிறுவனத்தை ஏமாற்ற சதித் திட்டம் தீட்டியதாக ஒரு குற்றச்சாட்டும், குற்றவியல் நடத்தை மூலம் பெற்ற சொத்துகளை வைத்திருந்தது தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகளும் அவர்மீது சுமத்தப்பட்டன.

குற்றச்செயலைச் செய்தபோது அவருடைய வயது 16. சிறார், இளையர் சட்டத்தின்கீழ் 18 வயதுக்குக் கீழானோரின் விவரங்கள் வெளியிடப்படமாட்டாது என்பதால், இளையர் பற்றிய மேல்விவரங்கள் வெளியாகவில்லை.

2017ல் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதன் 'சர்ஃபேஸ்' மடிக்கணினிகளுக்கு ஓர் உத்தரவாதத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள், பழுதான மடிக்கணினிகளுக்குப் பதில் புதிய மடிக்கணினிகளை முதலில் பெற்றுக்கொண்டு பின்னர் பழுதானவற்றை மைக்ரோசாஃப்டிடம் திருப்பித் தர அது வகைசெய்தது.

வாடிக்கையாளர்கள் மடிக்கணினியின் தயாரிப்பு அடையாள எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். அத்தகைய எண்களை இணையத்தில் சுமார் 25 டாலருக்கு (S$34) வாங்க முடியும் என்று தெரிந்துகொண்ட இளையர், தனது இணைய நண்பரான ஜஸ்டின் டேவிட் மே என்ற அமெரிக்கருடன் அந்த விவரத்தைப் பகிர்ந்துகொண்டார்.

பின்னர் மே கொடுத்த அமெரிக்க முகவரிக்குப் பழுதானவற்றுக்கு மாற்று மடிக்கணினிகளை அனுப்பும்படி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு விண்ணப்பித்தார்.

அவற்றைப் பெற்றுக்கொண்ட மே, சில மடிக்கணினிகளைத் தான் வைத்துக்கொண்டு மற்றவற்றை, குற்றம் சாட்டப்பட்ட இளையருக்கு அனுப்பிவைத்தார். 2018 ஜனவரியில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவில் மே மீது குற்றம் சாட்டப்பட்டது.

2018 மே மாதம், அமெரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவு சிங்கப்பூர் இளையருக்கு மோசடியில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக சிங்கப்பூர்க் காவல்துறையிடம் தெரிவித்தது.

குற்றம் சாட்டப்பட்ட இளையர் 'கேரோஸல்' மின்-வர்த்தகத் தளத்தின் மூலம் அந்த மடிக்கணினிகளை $1,700 முதல் $2,500 வரையிலான தொகைக்கு விற்றதாகவும், கிடைத்த தொகையை 'பிட்காயின்' எனும் மின்னிலக்கப் பணமாக மாற்றியதில் மொத்தப் பணத்தையும் இழந்துவிட்டதாகவும் கூறினார்.

அவர் மீதான நன்னடத்தைக் கண்காணிப்பு அறிக்கை மார்ச் 31ஆம் தேதி வெளியாகும். அதன் பிறகே அவருக்கான தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட நீதிபதி இன்று தெரிவித்தார்.

ஏமாற்று வேலைக்கான சதித் திட்டம் தீட்டிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் இளையருக்குப் பத்தாண்டு வரையிலான சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.

குற்றவியல் நடத்தை மூலம் கிடைத்த சொத்துகளை வைத்திருந்த குற்றத்திற்கு, அதிகபட்சம் $500,000 அபராதத்துடன், பத்தாண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
மோசடி