தம்முடைய முதலாளியின் பணப்பையில் 100 அமெரிக்க டாலர் நாணயங்கள் கட்டுக்கட்டாக இருந்ததைப் பணிப்பெண் ஒருவர் பார்த்திருக்கிறார். ஆசையைத் தவிர்க்கமுடியாமல் அவர் பணத்தைத் திருடியிருக்கிறார்.
நொவிட்டா என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அந்தப் பணிப்பெண் ஆறு ஆண்டுகளில் தனது முதலாளியிடமிருந்து $7,200க்கும் அதிகமான தொகையைத் திருடியிருக்கிறார். அவர் செய்தது முதலாளிக்குத் தெரிந்த பிறகும் நொவிட்டா அவரிடம் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்திருக்கிறார்.
40 வயது இந்தோனீசியரான நொவிட்டாவிற்கு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 22) ஐந்து வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பணத்தைத் திருடியதாகத் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.
அன்றாட வீட்டுப் பணிகளைச் செய்ய நொவிட்டாவிற்கு மாதந்தோறும் 1,000 வெள்ளி ஊதியமாக வழங்கப்பட்டதென நீதிமன்றத்தில் தெரியவந்தது. அவர் வேலை செய்த வீடு தஞ்சோங் ரூவில் அமைந்துள்ளது. அதில் இருந்த அனைத்து அறைகளுக்கும் செல்ல அவருக்கு அனுமதி இருந்தது.