கி.ஜனார்த்தனன்
தொடக்கக் கல்லூரி நிலையில் 'எச்3' எனப்படும் 'உயர்தர மூன்று' நிலையில் இதுவரை பயின்ற வெகுசில மாணவர்களில் ஒரு வராகவும் கடந்த ஆண்டு தேர்வின்போது அந்நிலையில் தமிழ் பயின்ற ஒரே மாணவியுமாகத் திகழ்கிறார் நந்தினி சிவகுமார், 18.
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் பயின்ற நந்தினி, முதலாம் ஆண்டிறுதித் தேர்வின் முடிவுகளுக்குப் பிறகு தமது தமிழ்த்திறனை அடுத்த நிலையில் சோதிக்க விரும்பியே 'எச்3' தமிழ்ப்பாடத்தை தேர்ந்தெடுத்து அதன் முடிவை, மற்ற பாடங்களுடன் நேற்று பெற்றுக்கொண்டார்.
'எச்3' நிலையில் எந்தப் பாடத்தைத் தெரிவுசெய்தாலும் முதலாம் ஆண்டிறுதித் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றிருக்கவேண்டும்.
பொருளியல், நிலவியல், தமிழ் ஆகிய பாடங்களை 'எச்2' நிலையிலும் உயிரியல், பொதுத்தாள் ஆகிய பாடங்களை 'எச்1' நிலையிலும் படித்த நந்தினி, இவற்றில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று தமது தொடக்கக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டில் 'எச்3' பாடத்தைப் பயின்றார்.
சில பாடங்களின் மதிப்பெண்கள் தாம் விரும்பிய அளவுக்கு இல்லாவிட்டாலும் தேர்வு எழுதிய அனுபவமே ஆகமொத்தத்தில் கற்றல் அனுபவமாக இருந்ததாக இவர் கூறினார்.
"நான் எவ்வளவு கற்றேன் என்பதை மட்டும் இந்த மதிப்பெண்கள் காட்டுகின்றன," என்றார் நந்தினி.
'எச்1' தமிழ்ப்பாடம், மாணவர்
களின் மொழி பயன்பாட்டுத் திறனைச் சோதிக்கும். 'எச்2' தமிழ்ப்பாடம் மொழித்திறனுடன் இலக்கியத் திறனைச் சோதிக்கும்.
'எச்3', இந்த இரண்டு திறன்
களுடன் கூடுதலாக, பாடத்திட்டத்தில் பரிந்துரைக்கப்படாத கவிதைகள், சிறுகதைகள், உரைநடைப்பகுதிகள் ஆகியவற்றை ஆழ்ந்து படித்துணர்ந்து அவற்றைத் திறனாய்வு நோக்கில் கருத்துகளை எழுதும் அங்கமும் இடம்பெறுகின்றன.
சிறு வயது முதல் தமிழ்ப்புத்தகங்களையும் சிறுகதைகளையும் விரும்பிப் படிக்கும் நந்தினி, தமிழ் ஆசிரியர் ஆக வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டுள்ளார்.
"என் ஆசிரியர் திரு வீரமுத்து கணேசனின் ஊக்குவிப்பால் துணிச்சலுடன் பாடத்தைச் செய்திருந்தேன்," என்று அவர் கூறினார்.
தொடக்கத்தில் இருந்த மொழிப்பிழைகளைக் களைய தமது ஆசிரியர் வெகுவாக கைகொடுத்ததாகக் குறிப்பிட்ட நந்தினி, அவரிடம் வாரத்திற்கு ஒரு முறையாவது ஆலோசனை பெற்றதாகக் கூறினார்.
"நந்தினி தமிழ் ஆர்வம் உள்ள மாணவி. அத்துடன் கடின உழைப்பாளியாகவும் தலைமைத்துவப் பண்புகளும் நிறைந்தவர்," என்று வழிகாட்டு ஆசிரியரான திரு கணேசன், 60, தெரிவித்தார்.
பல்வேறு காலங்களையும் நாடுகளையும் சேர்ந்த தமிழ் இலக்கியப் படைப்புகளின் கருத்துகளை புத்தகங்களாக மட்டுமின்றி இசை, நாடகம், கலந்துரையாடல்கள் மூலமாக ஆர்வத்துடன் இந்த மாணவி கற்றதாக ஆசிரியர் கூறினார்.

