கொவிட்-19 கொள்ளைநோய் பரவிக்கொண்டு இருந்த வேளையில், கட்டாயம் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என மருத்துவ விடுப்பு மூலம் அறிவிக்கப்பட்ட ஆடவர் ஒருவர் அதை மீறி வெளியில் சென்றார்.
2020 டிசம்பர் 8ஆம் தேதி வறட்டு இருமல் மற்றும் தொண்டை வறட்சி போன்றவற்றுக்குச் சிகிச்சை பெற அங் மோ கியோ பலதுறை மருந்தகத்திற்குச் சென்றார் டான் ஃபூ யூ, 21, என்னும் அந்த ஆடவர்.
அவரைப் பரிசோதித்த மருத்து வர், சுவாசக்குழாயில் தொற்று இருப்பதாகவும் கிருமித்தொற்று பரிசோதனைக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தி மூன்று நாள் மருத்துவ விடுப்பும் கொடுத்தார்.
ஆனால், அங்கிருந்து வீட்டுக்குப் புறப்பட்ட டான் பரிசோதனைக்குச் செல்லவில்லை என்றும் மறுநாள் தனியார் வாடகை கார் மூலம் சின் மிங் ரோட்டில் உள்ள பச்சைகுத்தும் நிலையத்திற்குச் சென்றதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அங்கு பிற்பகல் 1.40 மணிமுதல் 3 மணி வரை இருந்த டான் பின்னர் பேருந்து மூலம் வீடு திரும்பினார்.
கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி கிருமிப் பரிசோதனைக்குச் சென்ற அவருக்குத் தொற்று இல்லை என தெரியவந்தது.
ஆனால், இவ்வளவு நாள் கழித்து அவர் ஏன் தொற்றுப் பரிசோதனைக்குச் சென்றார் என்ற விவரம் நீதிமன்ற ஆவணங்களில் இல்லை.
முறையான காரணமின்றி மருத்துவ விடுப்புக் கட்டுப்பாட்டை மீறி வெளியில் சென்ற குற்றத்தை டான் கடந்த நவம்பர் 26ஆம் தேதி ஒப்புக்கொண்டார். நேற்று அவருக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது.
சிறைத் தண்டனைக்குப் பதில் மூன்று மாத காலம் பகல்நேர தகவல் அறிவிப்பு நிலையத்தில் சேவை புரியுமாறு டான் உத்தரவிடப்பட்டார்.
இந்த நிலையத்தை சிங்கப்பூர் சிறைச் சேவைத் துறை நடத்துகிறது. ஓராண்டு காலத்தில் 50 மணி நேரம் கண்காணிக்கப்பட்ட சமூக சேவையில் ஈடுபடவும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விதியைப் புறக்கணித்து இந்த ஆடவர் செய்த குற்றத்திற்கு இவரை ஆறு மாதம் வரை சிறையில் அடைக்கவும் $10,000 வரை அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடமுண்டு.
ஆயினும், டான் நன்னடத்தைக் கண்காணிப்புக்குத் தகுதியானவரா என்பதை சோதித்து அறியுமாறு அவரது வழக்கறிஞர் நீதிமன்றத் திடம் வேண்டி இருந்தார்.

