திங்கள்கிழமை நள்ளிரவு நிலவரப்படி சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,606க்கு அதிகரித்தது.
ஞாயிற்றுக்கிழமை அந்த எண்ணிக்கை 1,523ஆக இருந்தது என சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து 17வது நாளாக ஆயிரத்தைத் தாண்டி தொடர்ந்தது.
1,606 நோயாளிகளில் 44 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமையைக் காட்டிலும் ஐவர் கூடுதலாக இந்தப் பிரிவில் சேர்க்கப்பட்டனர்.
மொத்த நோயாளிகளில் உயிர்வாயு உதவி தேவைப்படுவோரின் எண்ணிக்கை 198.
மருத்துவமனைகளில் அனு
மதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தபோதிலும் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இறங்கி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை 15,283 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் அந்த எண்ணிக்கை 13,623ஆகக் குறைந்தது. ஏழு மரணங்கள் அன்றைய தினம் பதிவாயின.
13,623 நோயாளிகளில் 11,519 உள்ளூர்வாசிகளுக்கு ஏஆர்டி எனப்படும் ஆண்டிஜென் விரைவுப் பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர்களுக்கு இலேசான அறிகுறிகளுடன் அல்லது அறிகுறி இல்லாத நிலையில் பரிசோதனை செய்யப்பட்டிருக்கலாம். இதர 1,957 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டது.
வெளிநாடுகளைச் சேர்ந்த 147 பேரும் திங்கட்கிழமை எண்ணிக்கையில் அடங்குவர். அவர்களில் 99 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மூலமும் 48 பேருக்கு ஏஆர்டி மூலமும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

