சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 1,200க்கும் அதிகமான கட்டுகளில் இருந்த வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தக் கட்டுகளில் 2,200 சிகரெட் பொட்டலங்கள் இருந்தன.
சென்ற வாரம் வெள்ளிக்கிழமையன்று ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 93ல் நடத்தப்பட்ட சோதனையில் இந்த சிகரெட்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக சிங்கப்பூர் சுங்கத்துறை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட வாகனம் ஒன்றில் கறுப்பு நிற குப்பைப் போடும் பைகளில் இந்த சிகரெட்டுகள் இருந்ததாகவும் அறிக்கை குறிப்பிட்டது.
வாகனத்தை ஓட்டிய சீனாவைச் சேர்ந்த ஆடவர் கைதுசெய்யப்பட்டார். வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சிகரெட்டுகளை இறக்குமதி செய்வதற்கான 123,070 வெள்ளி வரியும் 9,790 வெள்ளி பொருள், சேவை வரியும் செலுத்தப்படவில்லை. இச்சம்பவம் குறித்து நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருவதாக சுங்கத்துறை அறிக்கை தெரிவித்தது. வரி செலுத்தப்படாத பொருள்களை வாங்குவது, விற்பது, விநியோகிப்பது, சேர்த்து வைப்பது உள்ளிட்டவை சுங்கத்துறை சட்டம், பொருள், சேவை வரிச் சட்டம் ஆகியவற்றின்கீழ் மோசமான குற்றங்களாகும்.
குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு சம்பந்தப்பட்ட பொருள்களுக்குச் செலுத்தவேண்டிய வரிக் கட்டணங்களில் 40 மடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படலாம். மேலும், ஆறாண்டு வரையிலான சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
இத்தகைய குற்றச் செயல்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படக்கூடும்.

