செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
fbb83278-22e2-4133-b698-bc9e07b474b2
-

மருத்துவ விடுப்பை நிராகரித்து வெளியே சென்றவருக்குச் சிறை

சமையல் கலைஞரின் மேல் சுவாசக் குழாயில் பிரச்சினை ஏற்பட்டதால் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டபோதும் பலமுறை வெளியே சென்ற அவருக்கு ஐந்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியரான 24 வயது லாவ் சீ சாங், மருத்துவ விடுப்பில் இருந்தபோது வேலைக்குச் சென்றதுடன் ரயிலில் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்். மேலும், வேலைக்கான நேரடி நேர்காணலிலும் பங்கேற்றிருக்கிறார்.

சில நாள்களுக்குப் பிறகு அவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டது தெரியவந்தது.

தொற்றுநோய்த் தடுப்புச் சட்டத்தை மீறியதாகத் தன் மீது சுமத்தப்பட்டிருந்த இரண்டு குற்றச்சாட்டுகளை லாவ் ஒப்புக்கொண்டார். தெலுக் ஆயரில் உள்ள 'நெப்போலியன் ஃபூட் அண்ட் வைன் பார்' உணவகத்தில் லாவ் வேலை செய்து வந்ததாக அரசாங்க துணை வழக்கறிஞர் பெனடிக்ட் தியோங் தெரிவித்தார்.

ஐந்து வயதில் மானபங்கம்,

தந்தைக்கு சிறைத் தண்டனை

தனது மகள் சுமார் ஐந்து வயதாக இருந்தபோது மானபங்கப்படுத்திய தந்தைக்கு மூவாண்டுகள், நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தந்தை தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதை மகள் பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் அறிந்திருந்திருக்கிறார்.

தொடக்கநிலை நான்கைத் தாண்டிய பிறகு பாலியல் குற்றங்கள் தொடர்பிலான ஒரு காணொளியை அந்தப் பெண் பார்த்திருக்கிறார். அதற்குப் பிறகே தந்தை மானபங்கப்படுத்தியது அவருக்குப் புரிந்தது. 2018ஆம் ஆண்டு அப்பெண்ணுக்கு 14 வயதானபோது காவல்துறைக்குப் புகார் கொடுக்கப்பட்டது.

இப்பொழுது 61 வயதாகும் பெண்ணின் தந்தை மீது சுமத்தப்பட்டிருந்த இரண்டு மானபங்கக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பெண்ணைப் பாதுகாப்பதற்காக தந்தையின் அடையாளத்தை வெளியிட அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது 18 வயதாகும் அப்பெண்ணை 2009ஆம் ஆண்டு அவரது தந்தை வீட்டில் மானபங்கப்படுத்தினார். அச்சம்பவம் நிகழ்ந்தபோது பெண்ணின் தாய் வீட்டில் இல்லை.

$7,200 திருடிய பணிப்பெண்

தனது முதலாளியின் பணப்பையில் சில 100 அமெரிக்க டாலர் நாணயங்களைப் பணிப்பெண் ஒருவர் பார்த்திருக்கிறார். ஆசையைத் தவிர்க்கமுடியாமல் அவர் பணத்தைத் திருடியிருக்கிறார்.

நொவிட்டா என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அந்தப் பணிப்பெண் ஆறு ஆண்டுகளில் தனது முதலாளியிடமிருந்து $7,200க்கும் அதிகமான தொகையைத் திருடியிருக்கிறார். அவர் செய்தது முதலாளிக்குத் தெரிந்த பிறகும் நொவிட்டா அவரிடம் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்திருக்கிறார்.

40 வயது இந்தோனீசியரான நொவிட்டாவிற்கு ஐந்து வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. திருடியதாகத் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.

அன்றாட வீட்டுப் பணிகளைச் செய்ய நொவிட்டாவிற்கு மாதந்தோறும் 1,000 வெள்ளி ஊதியமாக வழங்கப்பட்டதென நீதிமன்றத்தில் தெரியவந்தது. அவர் வேலை செய்த வீடு தஞ்சோங் ரூவில் அமைந்துள்ளது. அதில் இருந்த அனைத்து அறைகளுக்கும் செல்ல அவருக்கு அனுமதி இருந்தது.

அரசாங்க ரகசிய சட்டத்தை

மீறியதாகக் குற்றச்சாட்டு

அரசாங்க ரகசிய சட்டத்தின்கீழ் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. வேறொருவரிடம் கொடுக்கும் நோக்குடன் காவல்துறை நிலையம் ஒன்றில் கணினியிலிருந்து ஒருவரின் அடையாள அட்டை எண்ணைத் தெரிந்துகொண்டதாக 29 வயது பிரயன் தே வெய் சுவான் சந்தேகிக்கப்படுகிறார்.

இச்சம்பவம் நிகழ்ந்தபோது தே, சிங்கப்பூர் காவல்துறையில் சார்ஜண்ட் பதவியை வகித்தார். செம்பவாங் அக்கம்பக்கத்து காவல் நிலையத்தின் 'கியூபிக்கான் 2' கணினி முறையைப் பயன்படுத்த அவருக்கு அதிகாரம் இருந்தது.

அரசாங்க ரகசிய சட்டத்துடன் காவல்துறை சட்டம், கணினியின் தவறான பயன்பாட்டுக்கான சட்டம் ஆகிய ஒவ்வொன்றின்கீழும் தே மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதியன்று அனுமதியின்றி தே கணினியிலிருந்து தகவல்களைப் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

தே தனக்கு வழக்கறிஞர் ஒருவரை நியமிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் 14ஆம் தேதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.