சிங்கப்பூர் நாணய ஆணையம் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து 'ராஃபிள்ஸ் எடுகேஷன்' கல்வி நிறுவனத்தின் ஐந்து இயக்குநர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களைப் பிணையில் விடுவிப்பதற்கான நிபந்தனைகளும் அமைப்புக்குத் தெரிவிக்கப்பட்டன.
'ராஃபிள்ஸ் எடுகேஷன்'னின் துணை நிறுவளனங்களான 'ராஃபிள்ஸ் கே12', 'ராஃபிள்ஸ் இஸ்கந்தர்' ஆகியவை மலேசியாவில் இயங்குகின்றன. அவற்றுக்கு எதிராக அரிஃபின் வங்கி தந்த புகார்களைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
'ராஃபிள்ஸ் எடுகேஷன்' தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு சியூ ஹுவா செங், திரு லிம் ஹாவ் டெக், திரு இங் குவான் மெங், திருவாட்டி டோரிஸ் சுங் கிம் லியென் ஆகியோர் கைதுசெய்யப்பட்டவர்கள். சம்பந்தப்பட்ட ஒவ்வோர் இயக்குநருக்கும் பிணைத் தொகை 30,000 வெள்ளி.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிணை நிபந்தனைகளின்படி அதற்கு இவர்கள் வர்த்தக விவகாரப் பிரிவுக்கு உதவவேண்டும்.
இந்த இயக்குநர்கள் மீது இதுவரை குற்றச்சாட்டு ஏதும் சுமத்தப்படவில்லை. கைதுசெய்யப்பட்டதால் வருங்காலத்தில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று சொல்லமுடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

