உள்ளூர் இசைக் கலைஞரான சுபாஷ் கோவிந்த் பிரபாகர் நாயர், சமயங்கள், இனங்களுக்கு இடையிலான கசப்புணர்வைத் தூண்ட முயன்றதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி, தன் மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளையும் மூத்த மாவட்ட நீதிபதி முன்னிலையில் அவர் ஒப்புக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரரான 29 வயது சுபாஷ் நேற்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டு இனவாதக் கருத்துகளைக் கொண்ட 'ராப்' பாடலைத் தயாரித்து அவர் இணையத்தில் வெளியிட்டார்.
அதன் தொடர்பில் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதியன்று சுபாஷுக்கு 24 மாதங்களுக்கு நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிபந்தனையில், சுபாஷ் மீண்டும் தவறு செய்தால், முன்னைய குற்றத்துக்கும் தண்டிக்கப்படுவார் என்றும், அத்துடன் புதிய குற்றம் தொடர்பிலும் தண்டனை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது.
இருப்பினும், 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் தேதியன்று இனவெறுப்பைத் தூண்டும் கருத்துகளை வெளியிட்ட சீனக் கிறிஸ்துவரின் காணொளி குறித்து, சுபாஷ் சமூக ஊடகங்களில் கருத்துரைத்தார்.
அதேபோன்ற வெறுப்பைத் தூண்டும் கருத்துகளை மலாய் முஸ்லிம்கள் வெளியிட்டிருந்தால், அதிகாரிகள் அவர்களை வேறு விதமாக நடத்தியிருப்பர் என்று சுபாஷ் கூறியிருந்தார்.
மேலும், 2020ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே இனக் கசப்புணர்வைத் தூண்டும் பதிவையும் சுபாஷ் வெளியிட்டதாகக் கூறப்பட்டது.
2019ஆம் ஆண்டு ஆர்ச்சர்ட் டவர்ஸில் இந்திய ஆடவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சீன ஆடவருக்கு அவரது இனம் காரணமாக அதிகாரிகள் சலுகை காட்டியதாக சுபாஷ் குறிப்பிட்டிருந்தார். அது குறித்த காவல்துறை விசாரணை இடம்பெற்ற நிலையில், சென்ற ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதியன்று அந்த சமூக ஊடகப் பதிவின் கேலிச் சித்திரத்தை மேடை நிகழ்ச்சி ஒன்றில் காட்சிப்படுத்தினார்.
இனங்கள், சமயங்களுக்கு இடையே வெறுப்பைத் தூண்ட முயன்ற ஒவ்வொரு குற்றத்திற்கும், மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதிக்க சிங்கப்பூர் சட்டத்தில் இடமுண்டு.