சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு திங்கட்கிழமை (பிப்ரவரி 21) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து ஐந்து கிலோகிராமுக்கும் அதிகமான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 11 கிராம் அளவிலான 'ஐஸ்' போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மொத்த மதிப்பு $160,000.
திங்கட்கிழமை செங்காங்கில் 93 கிராம் கஞ்சா வைத்திருந்த 60 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டார். அருகில் இருந்த வாகனத்தில் இருந்து மேலும் 42 கிராம் கஞ்சாவும் 11 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும் பிடிபட்டன.
அதன் பிறகு அதிகாரிகள் அருகில் இருந்த வீட்டைச் சோதனையிட்டபோது 5 கிலோகிராமுக்கும் அதிகமான கஞ்சா பொட்டலங்களைக் கண்டுபிடித்தனர்.
அங்கு கைதான ஆடவரின் வாம்போ டிரைவ் வீட்டில் இருந்து மேலும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜனவரி 20ஆம் தேதி கஞ்சா கடத்த முயன்ற 24 வயதுப் பெண்ணைக் குடிநுழைவுச் சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்ற ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி 3 கிலோகிராமுக்கும் அதிகமான கஞ்சாவை மறைத்து எடுத்துவந்த மலேசிய லாரி ஓட்டுநர் பிடிபட்டார். சந்தேக நபர்களிடம் விசாரணை தொடர்கிறது.
சிங்கப்பூர் சட்டப்படி, 500 கிராமுக்கும் அதிகமான கஞ்சாவைக் கடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.

