சளிக்காய்ச்சல் அதிகம் பரவுவது, சக ஊழியர்கள் வேலையிலிருந்து விலகுவது, ஓமிக்ரான் வகை கொவிட்-19 கிருமித்தொற்றுக்குக் கூடுதலானோர் ஆளாவது, போதுமான ஓய்வு இல்லாதது ஆகிய காரணங்களால் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் அதிக நெருக்குதலுக்கு ஆளாவதாக இத்துறையின் ஊழியரணித் தலைவர் திருவாட்டி தனலெட்சுமி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தார்.
மோசமான சுவாசக் குழாய் பிரச்சினைக்கு ஆளாகும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், தங்களின் சாதாரண மருத்துவ விடுப்பிற்குப் பதிலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான விடுப்பை இப்போது பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற தகவல் ஒரு நற்செய்தி என்று சுகாதாரப் பராமரிப்புச் சேவை ஊழியரணியின் தலைவரான திருவாட்டி தனலெட்சுமி கூறியுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான விடுப்பு தொடர்பிலான கோரிக்கையை இந்த ஊழியரணிதான் முன்வைத்திருந்தது.
போதுமான மருத்துவ விடுப்பு நாள்கள் இல்லாமல் போனால் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் சம்பளமின்றி விடுப்பில் செல்வதைத் தவிர்க்க இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
வரும் நாள்களில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்கான விடுப்பை மருத்துவ விடுப்பாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கடந்த திங்கட்கிழமையன்று பொது மருத்துவமனைகள், பலதுறை மருந்தகங்கள் ஆகியவற்றில் வேலை செய்யும் ஊழியர்களுக்கான குறிப்பில் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் தெரிவித்திருந்தார்.
இதனால் மூன்று பொதுச் சுகாதாரப் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 70,000 சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் பலனடைவர்.
இந்த ஏற்பாடு அப்போதைய கொவிட்-19 நிலவரத்தைக் கருத்தில்கொண்டு அடுத்த மாதம் மறுபரிசீலனை செய்யப்படும்.
"நமக்குப் பெரிய அளவில் ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஓமிக்ரானால் ஊழியர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அவர்களின் பிள்ளைகள், அன்புக்குரியவர்கள் ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைக் கவனித்துக்கொள்ள ஊழியர்களுக்கு நேரம் தேவைப்படுகிறது. மேலும், இது சளிக்காய்ச்சல் பரவும் பருவமும்கூட," என்று திருவாட்டி தனலெட்சுமி சுட்டினார்.
ஓய்வு நாள்களிலும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் வேலைக்கு அழைக்கப்படுகின்றனர். அதனால் அவர்களுக்குப் போதுமான ஓய்வு இல்லை. மேலும், வெளிநாடுகளிலிருந்து வந்த பல சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் வேலையிலிருந்து விலகியதாகவும் திருவாட்டி தனலெட்சுமி சொன்னார்.
சென்ற ஆண்டு முற்பாதியில் கிட்டத்தட்ட 1,500 சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் வேலையிலிருந்து விலகியதாகக் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட அரசாங்கப் புள்ளி விவரங்கள் தெரிவித்தன.
கொள்ளைநோய்ப் பரவலுக்கு முந்தைய காலகட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 2,000 ஊழியர்கள் வேலையிலிருந்து விலகினர்.
சென்ற ஆண்டு முற்பாதியில் வேலையிலிருந்து விலகியோரில் வெளிநாடுகளிலிருந்து வந்த சுமார் 500 மருத்துவர்களும் தாதியரும் அடங்குவர்.
2020ஆம் ஆண்டு முழுவதுமே இத்துறையில் இத்தனை வெளிநாட்டு ஊழியர்கள்தான் வேலையிலிருந்து விலகினர்.
2019ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 600ஆக பதிவானது.
கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளான ஊழியர்களிடம் சில முதலாளிகள் இன்னமும் மருத்துவச் சான்றிதழ்களைத் தருமாறு கேட்கின்றனர்.
அத்தகைய ஊழியர்களாலும் மோசமாக நோய்வாய்ப்படாதோர் போன்றோராலும் மருத்துவமனைகளும் மருந்தகங்களும் சிரமப்படுகின்றன.

