வாகன உரிமைச் சான்றிதழ்
கட்டணங்கள் அதிகரிப்பு
பெரிய வாகனங்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் கணிசமாக அதிகரித்துள்ளது. 1,600 சிசிக்கும் அதிகமான கொள்ளளவு உள்ள வாகனங்களுக்கான 'பி' பிரிவில் கட்டணம் 86,102 வெள்ளியிலிருந்து 93,590 வெள்ளியாகக் கூடியது.
1,600 சிசிக்குக் குறைவான கொள்ளளவைக் கொண்ட வாகனங்களுக்கான 'ஏ' பிரிவில் கட்டணம் 63,000 வெள்ளிக்கு அதிகரித்தது.
வர்த்தக வாகனங்களுக்கான பிரிவில் கட்டணம் 46,501 வெள்ளியாக உயர்ந்தது. மோட்டார்சைக்கிள்களுக்கான 'டி' பிரிவில் கட்டணம் 10,589 வெள்ளியாகக் கூடியது.
பொதுப் பிரிவான 'இ' பிரிவில் கட்டணம் 93,102 வெள்ளியாக அதிகரித்தது.
சிங்கப்பூரில் திறக்கப்படவுள்ள
முன்னணிப் பள்ளி
பிரிட்டனின் முன்னணி பள்ளியான 'வெல்லிங்டன் காலேஜ்' (படம்) இன்னும் சில ஆண்டுகளில் சிங்கப்பூரில் திறக்கப்படவுள்ளது. சிங்கப்பூர் செல்வந்தர் பீட்டர் லிம் இதற்கு ஆதரவு வழங்குகிறார். மூன்றிலிருந்து 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான பாடத் திட்டங்களை இப்பள்ளி வழங்கும்.
வெளிநாடுகளில் இயங்கும் வெல்லிங்டன் பள்ளிகளை 'வெல்லிங்டன் காலேஜ் இன்டர்னேஷனல்' அமைப்பு நிர்வகிக்கிறது.
இந்த அமைப்பின் 'டபிள்யூசிஐ ரீஜனல் மேனேஜ்மெண்ட்' நிறுவனம் திரு லிம்முக்குச் சொந்தமானது. சிங்கப்பூர், இந்தோனீசியா, மலேசியா ஆகிய நாடுகளில் மூன்று பள்ளிகளைத் திறப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
'ஓமிக்ரான் அலை விரைவில்
உச்சத்தைத் தொடலாம்'
சிங்கப்பூரில் ஓமிக்ரான் வகை கொவிட்-19 அலை விரைவில் உச்சத்தைத் தொடக்கூடும் என்று வல்லுநர்கள் முன்னுரைத்துள்ளனர்.
மற்ற நாடுகளில் பொதுவாக கிருமித்தொற்று சம்பவங்கள் கணிசமாக அதிகரித்த பிறகு எண்ணிக்கை குறையும். அதைக் கருத்தில்கொள்ளும்போது சிங்கப்பூரிலும் அவ்வாறே நிகழக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரில் பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில்தான் ஆக அதிகமான கிருமித்தொற்று சம்பவங்கள் பதிாவாகி வந்துள்ளன. அதனால் நேற்று முன்தினமே தற்போதைய கொவிட்-19 அலை உச்சத்தைத் தொட்டிருக்கக்கூடும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தேசிய பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர்கள் அலெக்ஸ் கூக், சு லி யாங் உள்ளிட்டோர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் இவ்வாறு கூறினர்.
சில 'சாஸ்' அட்டைகள் வைத்திருந்தால்
இலவச முகக்கவசங்கள் பெறலாம்
வரும் திங்கட்கிழமை முதல் 'சாஸ்' எனும் சமூக சுகாதார உதவித் திட்டத்தின்கீழ் நீல, ஆரஞ்சு நிற அட்டடைகளை வைத்திருப்போருக்கு இலவச முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று தெமாசெக் அறநிறுவனம் அதன் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் 13ஆம் தேதிவரை சம்பந்தப்பட்டவர்கள் இலவச முகக்கவசங்களை சில பேரங்காடிகளிலும் கடைத்தொகுதிகளிலும் பெற்றுக்கொள்ளலாம்.
அமைச்சர் வோங்: பணவீக்கம்
அதிகரித்தால் அரசாங்கம் உதவும்
சிங்கப்பூரில் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட அதிகரித்தால் அரசாங்கம் கூடுதல் உதவி வழங்கும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார். நிலைமை மோசமடைந்தால் அரசாங்கம் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும் என்று அவர் குறிப்பிட்டார். வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரு வோங் பேசினார்.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் பொருள்கள், சேவைகளின் விலை புதிய உச்சத்தைத் தொட்டு பொருளியல் வல்லுநர்களின் கணிப்பை மிஞ்சியது.
அதைத் தொடர்ந்து இவ்வாண்டுக்கான பணவீக்க முன்னுரைப்பை மறுபரிசீலனை செய்யப்போவதாக அரசாங்கம் கூறியது.

