சிங்கப்பூரில் அடுத்த மாதம் முதல் 'இண்டிகெய்ட்', 'ஆல்டெஸ்ட்' எனும் இரண்டு புதிய 'ஏஆர்டி'
கொவிட்-19 பரிசோதனைக் கருவிகள் விற்பனைக்கு வரும்.
சீனாவிலிருந்து ஐந்து மில்லியன் 'ஆல்டெஸ்ட்' கருவிகளை இறக்குமதி செய்யப்போவதாக 'அல்கொட்டெக்' மருத்துவக் கருவிகள் நிறுவனம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தது.
'ஃபேர்பிரைஸ்', 'கார்டியன்', 'வாட்சன்ஸ்', 'ஷாப்பி', 'லசாடா' உள்ளிட்ட சில்லறை வர்த்தக நிறுவனங்கள் இவற்றை விற்கும்.
ஒரே நேரத்தில் 80 மில்லியன் 'ஏஆர்டி' கருவிகளைத் தனது கிடங்கில் வைக்கமுடியும் என்று 'அல்கொட்டெக்' குறிப்பிட்டது.
மருத்துவக் கருவிகள் மொத்த விற்பனைக் கடையான 'எஸ்டிடி மொலிக்கியூலர்', முதலில் 20,000லிருந்து 50,000 'இண்டிகெய்ட்' 'ஏஆர்டி' கருவிகளை அடுத்த மாதம் இறக்குமதி செய்யும்.
அவற்றை வைத்துக்கொள்ள சில்லறை வர்த்தகர்கள் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக 'எஸ்டிடி மொலிக்கியூலர்' தெரிவித்தது.
எனினும், அந்நிறுவனத்தால் 'இண்டிகெய்ட்' கருவிகளைக் குறைந்த எண்ணிக்கையில்தான் தருவிக்கமுடியும்.
ஹாங்காங்கில் 'ஏஆர்டி' கருவிகளுக்கான தேவை பெரிதும் அதிகரித்திருப்பது இதற்குக் காரணம். ஹாங்காங்கில்தான் 'இண்டிகெய்ட்' கருவிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
வருங்காலத்தில் கூடுதல் எண்ணிக்கையில் 'இண்டிகெய்ட்' கருவிகள் இறக்குமதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
'இண்டிகெய்ட்', 'ஆல்டெஸ்ட்' ஆகிய இரண்டு 'ஏஆர்டி' கருவிகளின் விலையும் ஐந்து வெள்ளிக்குக் குறைவாக இருக்கும்.
புதிய 'ஏஆர்டி' கருவிகளைப் பற்றி சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் முதன்முதலில் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் பேசினார்.

