எஸ்பிஹெச் மீடியா டிரஸ்ட் (எஸ்எம்டி) நேற்று அதன் புதிய ஊடகக் கல்விக் கழகத்தைத் தொடங்கியுள்ளது. புதிய ஊழியர்கள் பயிற்சி பெறவும், தற்போதைய செய்தியாளர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ளவும் இது உதவும்.
'எஸ்பிஹெச் ஊடகக் கல்விக் கழகம்', ஊடகத் துறையில் அனுபவம் வாய்ந்த மூத்தோருடனும், அனைத்துலகக் கல்வி நிலையங்களுடனும் இணைந்து செயல்படும். அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள பாயிண்டர் கல்வி நிலையம், பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் இதழியலுக்கான ராய்ட்டர்ஸ் கல்வி நிலையம் போன்றவற்றுடன் இணைந்து இந்தக் கழகம் உள்ளூர் செய்தியாளர்களுக்கான பாடத்திட்டங்களை வழங்கும்.
தொடக்கத்தில் எஸ்எம்டி ஊழியர்கள் மட்டுமே இதில் பயில இயலும். படிப்படியாக சிங்கப்பூரிலும், இந்த வட்டாரத்திலும் உள்ள மற்ற ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
வட்டார நாடுகளுடன் நல்ல புரிதலுக்கும், சிங்கப்பூரில் செய்தியாளர்களுக்கான வட்டாரக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான தளமாகவும் புதிய கல்விக் கழகம் விளங்கும் என்று எஸ்எம்டியின் தலைவர் கோ பூன் வான் (படத்தில் இடமிருந்து இரண்டாவது நபர்) குறிப்பிட்டார். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அலுவலகத்தில் இடம்பெற்ற தொடக்க நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் துணை ஆசிரியரும், எஸ்பிஹெச் ஊடகக் கல்விக் கழகத்தின் முதல்வருமான திரு. பால் ஜேக்கப், செய்தியாளர்கள் தங்கள் பணிக்காலம் முழுவதும், வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கற்றுக்கொள்வது முக்கியம் என்றார். விரைந்து செயல்படவேண்டிய செய்தித் துறையில், அதற்கான புதிய வழிகளை உருவாக்குவதும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

