சிங்கப்பூரில் பணவீக்கம், அதாவது விலைவாசி ஜனவரியில் தொடர்ந்து அதிகரித்தது. பணவீக்கம் கொஞ்ச காலத்திற்குக் கூடி பிறகு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடியிருப்பு, தனியார் போக்குவரத்துச் செலவை நீக்கிவிட்டு கணக்கிடப்படும் மூலாதார பணவீக்கம் மேலும் அதிகரித்து ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் சென்ற மாதம் 2.4%க்கு கூடியது. இது டிசம்பரில் 2.1% ஆக இருந்தது.
இதற்கு முன் கடந்த 2012 செப்டம்பர் மாதம்தான் பணவீக்கம் 2.4% அளவுக்கு அதிகமாக இருந்தது.
அதற்குப் பிறகு கடந்த ஜனவரியில்தான் அந்த அளவுக்கு அது கூடியது.
உணவு, மின்சாரம், எரிவாயு செலவு கூடியதே பணவீக்கம் அதிகரித்ததற்கான முக்கிய காரணம். அதோடு, சில்லறை மற்றும் இதர பொருட்களுக்கான செலவு மெதுவாகக் குறைந்ததும் காரணம்.
வர்த்தக தொழில் அமைச்சும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் கூட்டு அறிக்கையில் இந்த விவரங்களைத் தெரிவித்தன.
ஒட்டுமொத்த பணவீக்கம் மாறாமல் முந்திய மாத அளவுக்கே, அதாவது 4% ஆகவே இருந்தது.
புளூம்பர்க் நிறுவனம், பொருளியல் வல்லுநர்களின் பணவீக்கக் கணிப்புகள் பற்றி தகவல் வெளியிட்டு இருந்தது. அதில் அவர்கள் எதிர்பார்த்த அளவைவிட பணவீக்கம் குறைவாகவே உள்ளது.
அந்த வல்லுநர்கள் மூலாதார பணவீக்கம் 2.5% ஆக இருக்கும். ஒட்டுமொத்த பணவீக்கம் 4.2% ஆக இருக்கும் என்று கணித்து இருந்தார்கள்.
இதனிடையே, பணவீக்க நிலவரம் பற்றி விளக்கம் அளித்த அமைச்சும் ஆணையமும், அண்மையில் உலக அளவில் பணவீக்கம் மேலும் அதிகரித்ததைச் சுட்டிக்காட்டின. கொஞ்ச காலத்திற்கு அது அதிகமாகவே இருக்கும்.
பிறகு இந்த ஆண்டின் பிற்பாதியில் பணவீக்கம் குறையத் தொடங்கும் என்று அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. கொஞ்ச காலத்திற்குக் கச்சா எண்ணெய் விலை ஏற்றமாகவே இருக்கும்.
உலக போக்குவரத்துப் பிரச்சினைகளும் சிங்கப்பூரின் முக்கிய வர்த்தக பங்காளி நாடுகளில் தொழிலாளர் பற்றாக்குறையும் தொடர்ந்து இருந்து வரும் என்று அவை தெரிவித்துள்ளன.
பொருள், சேவை விநியோகத்தில் உலக அளவில் நிலவும் இடையூறுகள் இந்த ஆண்டில் இரண்டாவது பாதியில் அகலும் வாய்ப்பு இருக்கிறது என்று அவை கூறின.
இதனால் உலக நிலவரங்கள் காரணமாக பணவீக்கத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் மெதுவாக இருக்கும் என்றும் அவை குறிப் பிட்டு இருக்கின்றன.
அதே வேளையில், தொற்று காரணமாக அல்லது வட்டார, உலக உறவுகள் காரணமாக ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் பணவீக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்று அவை தெரிவித்துள்ளன.

