சிங்கப்பூரில் சென்ற ஞாயிற்றுக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்ததில் பொங்கோலில் பல மரங்கள் சேதமடைந்தன.
அதைத் தொடர்ந்து, பொங்கோல் ஆர்காடியா குடியிருப்புப் பேட்டையின் அனைத்து மரங்களும் சோதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாசிர் ரிஸ்-பொங்கோல் நகர மன்றம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸுக்கு எழுதிய கடிதத்தில் அவ்வாறு குறிப்பிட்டது.
ஆண்டுக்கு இரண்டு முறை மரங்களின் கிளைகள் வெட்டப்படுவதுடன் வழக்கமான சோதனைகளை நடத்துவதாகவும் அண்மையில் இந்த மாதத் தொடக்கத்தில் அத்தகைய சோதனை இடம்பெற்றதாகவும் நகர மன்றம் கூறியது.
இருப்பினும், குடியிருப்பாளர்களுக்கு மறுஉறுதிப்படுத்தும் நோக்கில், மேலும் ஒரு மறுஆய்வு செய்யப்படுவதாகவும் இன்னும் ஒரு வாரத்திற்குள் அது முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அண்மையில், சுமார் நான்கு மாடி உயரம் கொண்ட மரம் ஒன்று, காரின் மீது விழுந்ததில் அதன் ஓட்டுநர் வாகனத்திற்குள் சிக்கிக்கொண்டார்.
சம்பவத்தில் காரின் முன்பக்கக் கண்ணாடியும் சன்னலும் சிதைந்தன. மரக் கிளைகள் காருக்குள் துளையிட்டுப் புகுந்தன.
ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாகத் தப்பினார். பாதிக்கப்பட்ட ஆடவரைக் குடிமைத் தற்காப்புப் படையினர், பத்து நிமிட முயற்சியில் மீட்டனர்.
அந்த ஆடவருக்கு உதவிவருவதாக நகர மன்றம் தெரிவித்தது.
அந்தக் குடியிருப்புப் பேட்டையின் வேறு சில மரங்களும் ஞாயிற்றுக்கிழமை மோசமாக பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. விளையாட்டுத்திடலுக்கு அருகே இருக்கும் மற்றொரு மரம் பன்னோக்கு மண்டபத்தின் மீது விழுந்ததாகக் குடியிருப்பாளர்கள் கூறினர்.
அண்மையச் சோதனையின் போது, அங்குள்ள மரங்கள் அனைத்தும் நல்ல நிலையில் இருப்பதாக நிபுணர்கள் சான்றளித்திருந்தனர்.

