சிங்கப்பூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிறந்த 'லே லே' பாண்டா குட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
ஆனால் இந்தப் பாண்டா குட்டி மட்டுமே சிங்கப்பூரில் பிறக்கவில்லை. சிங்கப்பூரில் உள்ள நான்கு வனவிலங்கு பூங்காவில் 2021ஆம் ஆண்டில் மொத்தம் 900 புதிய விலங்கினங்கள் பிறந்துள்ளன. மண்டாய் வனவிலங்கு குழுமம் நேற்று ெவளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்தது.
முட்டை போட்டு குஞ்சு பொரிக்கும் 160 உயிரினங்களும் அனைத்துலக இயற்கைப் பாதுகாப்பு சங்கம் பட்டியலிட்டுள்ள அருகி வரும் உயிரினங்களில் 44 உயிரினங்களும் சிங்கப்பூரில் பிறந்துள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.
முன்பு சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகம் என்று அழைக்கப்பட்ட தற்போதைய மண்டாய் வனவிலங்கு காப்பகம் (எம்டபிள்யூஜி), சிங்கப்பூரில் உள்ள விலங்கியல் தோட்டம், நைட் சஃபாரி, ஜூரோங் பறவைப் பூங்கா, ரிவர் வொண்டர்ஸ் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறது.
விலங்குப் பராமரிப்பு குழுவினரின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் காப்பகத்தின் இனப்பெருக்க முயற்சி ஆகியவற்றின் பயனாக ரிவர் வொண்டர்ஸ் பூங்காவில் லே லே பிறந்தது.
சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்திலும் புதிய வரவுகள் இருந்தன. செப்டம்பரில் இரண்டு 'கிரேவி' ரக வரிக்குதிரை குட்டி, நான்கு ஆப்பிரிக்க நாய் குட்டிகள் அங்கு பிறந்தன.
வரிக்குதிரை குட்டி, ஐரோப்பிய விலங்கியல் பூங்கா மற்றும் மீன்வளர்ப்பு சங்கம் நிர்வகிக்கும் திட்டத்தின் மூலம் பிறந்தவை. ஆப்பிரிக்க நாய் பல கண்டங்களில் பரவியிருந்தாலும் தற்போது அழிந்து வருகின்றன.
விலங்கியல் தோட்டத்தில் உள்ள ரெப்டோப்பிய பிரிவில் 70க்கும் மேற் பட்ட அழிந்து வரும் தங்க மண்டெல்லா தவளைகள் முட்டைகளைப் பொரித்துள்ளன. ஒரு ஜோடி சகிஷிமா புல்வெளி பல்லிகளும் தெற்கு ஆசியாவில் அழிந்துவரும் 'மலாயன் பாக்ஸ்' என்று அழைக்கப்படும் மூன்று ஆமைகளும் சிங்கப்பூரில் பிறந்துள்ளன.
தனிச்சிறப்புமிக்க 'ஃபால்ஸ் காரியல்' எனக் குறிப்பிடப்படும் முதலைகளை இனப்ெபருக்கம் செய்வதில் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம் முதல் முறையாக வெற்றி கண்டுள்ளது.
இந்த வகை முதலைகள் குறிப்பிட்ட தட்பவெப்பத்தில் மட்டுமே இனப்ெபருக்கம் ெசய்யக்கூடியவை.
சென்ற கிறிஸ்மஸ் நாளை, நைட் சஃபாரி புதிய வரவுடன் கொண்டாடி மகிழ்ந்தது.
தென்கிழக்கு ஆசியாவில் அருகி வரும் இனமான 'சண்டா ஸ்ேலா லோரிஸ்' எனும் மரத்தில் வாழும் உயிரினம் பிறந்தது. இந்த வகை விலங்குகளுக்கு நோய்களை குணப்படுத்தும் சக்தி இருப்பதாக நம்பப்படுவதால் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. நைட் சஃபாரியில் முதல் முறையாக இரண்டு 'மாஸ்க் சிவட்' குட்டிகளும் பிறந்துள்ளன. உலகிலேயே சிங்கப்பூரில் உள்ள ஜூரோங் பறவைப் பூங்காவில்தான் மூன்று வகையான பறவை இனங்கள் குடிகொண்டுள்ளன. 'நீக்ரோஸ் பிளீடிங்-ஹார்ட்' புறா, 'ஸ்ட்ரா-ஹெட்டட்' கிளி, நீல நிற கண்களைக் கொண்ட கிளி ஆகியவை வசிப்பதாக அறிக்கை தெரிவித்தது.

