பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டுக் கண்காணிப்புக் குழு

பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டுக் கண்காணிப்புக் குழு

1 mins read
2e19b46a-1d51-4ea9-b722-f23a9980be29
கண்காணிப்புக் குழு தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உள்துறைத் துணையமைச்சர் டெஸ்மண்ட் டான் (படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

சிங்கப்பூர்க் காவல்துறையும், சிங்கப்பூர் போக்குவரத்துச் சங்கமும் இணைந்து பயங்கரவாத மிரட்டல், வாகனங்களை ஈடுபடுத்திக் குற்றச் செயல்களில் ஈடுபடுதல் ஆகியவற்றைக் கண்காணிக்கும் குழு ஒன்றைத் தொடங்கியுள்ளன.

இன்று (பிப்ரவரி 24) தொடங்கப்பட்ட அந்தக் குழு, போக்குவரத்துத் துறையினருக்குப் பாதுகாப்பு மிரட்டல்கள் பற்றிய மேம்பட்ட புரிதலை ஏற்படுத்த உதவும்; மிரட்டல்கள் அடையாளம் காணப்பட்டால் எச்சரிக்கை விடுத்தல், சம்பவ இடத்தில் நேரில் களமிறங்கிச் செயலாற்றுதல் போன்றவற்றிற்கும் கைகொடுக்கும்.

அண்மை ஆண்டுகளில் பிரான்ஸ், லண்டன், அமெரிக்கா ஆகியவற்றில் பயங்கரவாதிகள் வாகனத்தை ஓட்டிவந்து தாக்குதலில் ஈடுபட்டதைக் கருத்தில் கொண்டு, அந்தக் குழு அமைக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

2001இல் ஜமா இஸ்லாமியா அமைப்பு சிங்கப்பூரில் நடத்தத் திட்டமிட்டிருந்த அத்தகைய தற்கொலைத் தாக்குதல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதை அது சுட்டியது.

மெய்நிகர் முறையில் இடம்பெற்ற தொடக்க நிகழ்ச்சியில் உள்துறைத் துணையமைச்சர் டெஸ்மண்ட் டான் கலந்துகொண்டார்.

2015இல் இருந்து பயங்கரவாதத் தொடர்புடைய நடத்தைக்காக 54 பேர் அடையாளம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

காவல்துறை ஏற்கெனவே, ரசாயன, உற்பத்தி, ஹோட்டல், சில்லறை விற்பனை, நிதி, பொதுக் கேளிக்கை, இணையம் ஆகிய துறைகளுக்கான அத்தகைய துறைசார்ந்த பாதுகாப்புக் கண்காணிப்புக் குழுக்களை அமைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்