பாட்டாளிக் கட்சியின் தலைவர் திருவாட்டி சில்வியா லிம் கடந்த வெள்ளிக்கிழமையன்று தமது கைப்பேசி அரசு சார்பு அமைப்புகளால் ஊடுருவப்பட்டிருக்கலாம் என்று ஆப்பிள் நிறுவனம் தமக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாகக் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து காவல் துறையினரின் அழைப்பின் பேரில் அவர் புதன்கிழமை அன்று காவல் துறை அலுவலகத்துக்கு சென்றார்.
அங்கு தமது புகாருக்கு உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் தாம் திருப்தியடைந்துள்ளதாகவும் இந்த விவகாரத்தில் விசாரணை தேவையில்லை என்று கூறியதாகவும் காவல் துறையினர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.
ஆகையால் திருவாட்டி லிம் காவல் துறையிடம் புகார் செய்யவில்லை என்றும் தமது கைப்பேசி தடயவியல் சோதனைக்கு உட்படுத்துவதற்காக அனுப்பவேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்ததாக காவல் துறை விளக்கமளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை இத்துடன் முடிவுறுவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.


