சென்ற வாரம் தளர்த்தப்பட்ட விதிமுறையின்படி பல்வேறு துறைகளில் இனி ஊழியர்களுக்குத் திட்டமிட்டு கொவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ளத் தேவையில்லை. சம்பந்தப்பட்ட துறைகள் இதை வரவேற்றுள்ளன.
உணவு, பானத் துறை ஊழியர்கள், கடைத்தொகுதி ஊழியர்கள், விமான நிலையம் போன்ற எல்லைப் பகுதிகளில் வேலை செய்வோர் உள்ளிட்டோருக்கு அடிக்கடி பரிசோதனைகளை மேற்கொள்வது இதுவரை கட்டாயமாக இருந்தது. இனி சுகாதாரப் பராமரிப்பு, மூத்தோர் பராமரிப்பு, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பிள்ளைகள் இருக்கும் பாலர் பள்ளிகள் போன்ற கிருமித்தொற்றுக்கு ஆளாகும் சாத்தியம் உள்ளவர்கள் அதிகம் இருக்கும் துறைகளில் மட்டும்தான் திட்டமிட்டு ஊழியர்களுக்குப் பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும்.
இந்த விதிமுறை தளர்த்தப்பட்டதால் தங்களின் நிதி, செயல்பாடுகள் சார்ந்த சுமை குறைவதாக சில நிறுவனங்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தன. இதனால் ஊழியர்களிடையேயும் மேற்பார்வையாளர்களிடையேயும் பதற்றமும் குறைந்துள்ளதாக சிலிகி சாலையில் அமைந்துள்ள 'ஜிஆர்.ஐடி' கடைத்தொகுதியின் பேச்சாளர் கூறினார்.
'ஏஆர்டி' பரிசோதனைக் கருவிகளால் சேரும் பிளாஸ்டிக் குப்பையின் அளவும் குறைவதாக அவர் குறிப்பிட்டார். 'பிஹெச்ஜி' போன்ற சில கடைகளும் இவ்வாறு கூறின.
திட்டமிட்டு பரிசோதனைகளை மேற்கொள்வதால் சராசரியாக ஓர் ஊழியருக்கு 20 வெள்ளி செலவு செய்யவேண்டியிருந்ததாக 'ஜிகர் ஆண்ட் போனி' நிறுவனம் கூறியது. இப்போது அத்தகைய செலவுகள் குறைவதாக அந்நிறுவனம் சுட்டியது. விதிமுறை தளர்த்தப்பட்ட பிறகு வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளிலும் இனி திட்டமிட்டு பரிசோதனைகளை மேற்கொள்ளத் தேவையில்லை. இதன் மூலம் தங்களின் செயல்முறைகள் சீராவதாக தங்குவிடுதிகள் கூறின.
தங்குவிடுதிகளைச் சுத்தமாக வைத்திருப்பது, மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது, பாதுகாப்பை உறுதிசெய்வது போன்ற பணிகளில் இனி கூடுதல் கவனம் செலுத்தமுடியும் என்று சில தங்குவிடுதிகள் தெரிவித்தன.

