அரசாங்க அதிகாரிகளை அடித்தவருக்குச் சிறை
தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் உணவங்காடியில் அமர்ந்ததுடன் தேசிய சுற்றுப்புற வாரிய அதிகாரிகளை அடித்த ஆடவருக்கு 26 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரெட்ஹில் உணவங்காடி ஒன்றின் நுழைவாயிலில் வருகையாளரின் டிரேஸ்டுகெதர் பதிவைக் கண்காணிக்கும் பணியாளரிடம் 54 வயது சுவா சூன் ஹியென் தன்னிடம் 'சேஃப்என்ட்ரி' கருவி இல்லை என்று பொய் சொல்லியிருக்கிறார். உணவை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பப்போவதாகவும் அவர் கூறினார். ஆனால் அதற்குப் பிறகு உணவங்காடி நாற்காலியில் தனது காதலியுடன் அமர்ந்து முகக்கவசம் அணியாமல் சுவா பேசியிருக்கிறார். இதை அறிந்த தேசிய சுற்றுப்புற அமைப்பு அதிகாரிகளை சுவா அடித்தார்.
சிங்கப்பூரரான சுவா குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
வசதி குறைந்தோருக்கான உணவு ஏற்பாடு வசதி நீட்டிப்பு
வசதி குறைந்த குடும்பங்களுக்கு உணவு வழங்க 'தி ஃபூட் பேங்க்'குடன் 'கோல்ட் ஸ்டோரேஜ்' பேரங்காடி இணைந்து செயல்பட்டு வந்துள்ளது. இந்த ஏற்பாடு விரிவுபடுத்தப்படவுள்ளதாக 'கோல்ட் ஸ்டாரேஜ்' தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'பெட்டர் டுகெதர்' எனும் ஒன்றாக மேம்படுவோம் திட்டத்தின்கீழ் 'கோல்ட் ஸ்டாரேஜ்', எளிதில் கெட்டுப்போகாத உணவு வகைகளை 'தி ஃபூட் பேங்க்' உணவு நன்கொடை அமைப்புக்கு வழங்கி வருகிறது. டின்களில் பாதுகாக்கப்படும் உணவு, அரிசி, பால் மாவு உள்ளிட்ட உணவு வகைகளை 'கோல்ட் ஸ்டோரேஜ்' 'தி ஃபூட் பேங்க்'கிற்கு வழங்கும்.
'தி ஃபூட் பேங்க்'கின் முயற்சிகளால் 300,000 பேர் பலனடைகின்றனர். குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளும் இதனால் பலனடைவோரில் அடங்குவர். உதவித் திட்டத்தின் விரிவாக்கத்தின் மூலம் செங்காங் வட்டாரத்தில் உள்ள வசதி குறைந்தோருக்கு உணவு வழங்கப்படும். பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை அவர்களுக்கு வழங்கப்படவுள்ள உணவுப் பொருள்களில் அடங்கும்.
சிங்கப்பூரில் முதலீடு செய்யவுள்ள மறுபயனீட்டு எரிசக்தி நிறுவனம்
உலகின் நான்காவது ஆகப் பெரிய மறுபயனீட்டு எரிசக்தி தயாரிப்பு நிறுவனமான 'இடிபிஆர்' எனும் 'இடிபி ரினியூவபல்ஸ்' நிறுவனம், 2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரில்
10 பில்லியன் வெள்ளி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆசிய பசிபிக் வட்டாரத்துக்கான தலைமையகத்தை சிங்கப்பூரில் அமைப்பது போர்ச்சுகீசிய நிறுவனமான 'இடிபிஆர்'ரின் இலக்கு.
சிங்கப்பூரின் மறுபயனீட்டு நிறுவனமான 'சன்சீப்'பின் 91 விழுக்காடு பங்குகளையும் 'இடிபிஆர்' வாங்கியுள்ளது. அந்நிறுவனம் வட்டார அளவில் தனது முதலீடுகளை அதிகரிக்க எண்ணம் கொண்டுள்ளது. 'சன்சீப்' நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை 'இடிபிஆர்' வாங்குவது குறித்து சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதலில் அறிவிக்கப்பட்டது. 'சன்சீப்'பின் பல மறுபயனீட்டு எரிசக்தித் திட்டங்களை இனி 'இடிபிஆர்' ஏற்று நடத்தும்.
கொவிட்-19 கிருமித்தொற்று
சம்பவங்கள் குறைந்தன
சிங்கப்பூரில் நேற்று முன்தின நிலவரப்படி புதிதாக 20,312 கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. இந்த எண்ணிக்கை, கடந்த செவ்வாய்க்கிழமையன்று பதிவானதைவிட மிகவும் குறைவு.
கிருமித்தொற்றுக்கு ஆளானோரில் மொத்தம் 1,587 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை, கடந்த செவ்வாய்க்கிழமை பதிவானதைவிட குறைவு. தீவிர சிகிச்சைப் பிரிவில் 46 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 200 நோயாளிகளுக்கு செயற்கை சுவாச உதவி தேவைப்படுகிறது.
உள்ளூரில் பதிவான கிருமித்தொற்று சம்பவங்களில் 17,267 பேருக்கு 'ஏஆர்டி' பரிசோதனையின் மூலம் கிருமித்தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. இவர்கள் மோசமாக நோய்வாய்ப்படாதவர்கள். 2,885 பேருக்கு 'பிசிஆர்' பரிசோதனையின் மூலம் கிருமித்தொற்று ஏற்பட்டது தெரியவந்தது.