சிங்கப்பூர் காவல்துறையும் சிங்கப்பூர் போக்குவரத்துச் சங்கமும் இணைந்து பயங்கரவாத மிரட்டல், வாகனங்களை ஈடுபடுத்திக் குற்றச் செயல்களில் ஈடுபடுபடுவது ஆகியவற்றைக் கண்காணிக்கும் குழு ஒன்றைத் தொடங்கியுள்ளன. நேற்று தொடங்கப்பட்ட இக்குழு, போக்குவரத்துத் துறையினருக்குப் பாதுகாப்பு மிரட்டல்கள் பற்றிய மேம்பட்ட புரிதலை ஏற்படுத்த உதவும்.
மிரட்டல்கள் அடையாளம் காணப்பட்டால் எச்சரிக்கை விடுப்பது, சம்பவ இடத்தில் நேரில் களமிறங்கிச் செயலாற்றுவது போன்றவற்றிற்கும் இக்குழு கைகொடுக்கும்.
அண்மைய ஆண்டுகளில் பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதிகள் வாகனத்தை ஓட்டிவந்து தாக்குதலில் ஈடுபட்டதைக் கருத்தில்கொண்டு, இக்குழு அமைக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. 2001ஆம் ஆண்டு ஜமா இஸ்லாமியா அமைப்பு சிங்கப்பூரில் நடத்தத் திட்டமிட்டிருந்த அத்தகைய தற்கொலைத் தாக்குதல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதை குழு சுட்டியது.
நேற்று மெய்நிகர் வாயிலாக நடந்த தொடக்க நிகழ்ச்சியில் உள்துறை துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் கலந்துகொண்டார். 2015லிருந்து பயங்கரவாதத் தொடர்புடைய நடத்தைக்காக 54 பேர் அடையாளம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார். காவல்துறை ஏற்கெனவே மற்ற சில துறைகளுக்கான கண்காணிப்புக் குழுக்களை அமைத்துள்ளது.

