இவ்வாண்டு இதுவரையில் குறுந்தகவல்களின் மூலம் ஏமாற்றிப் பணம் பறிக்கும் குறைந்தது 900 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. மேலும், காவல்துறையினரைப் போல் நடித்து ஏமாற்றுக்காரர்கள் மேற்கொள்ளும் மோசடிச் சம்பவங்கள் மீண்டும் தலைதூக்குவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.
"இத்தகைய மோசடிச் சம்பவங்களில் குறிவைக்கப்படுவோருக்கு வாட்ஸ்ஆப் போன்ற குறுந்தகவல் செயலிகளின் மூலம் தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் வரும்," என்று காவல்துறை கூறியது.
"சிங்கப்பூர் காவல்துறை போன்ற அரசாங்க அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று தங்களை அடை யாளப்படுத்திக்கொள்பவர்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் பேசுவர்," என்று காவல்துறை சொன்னது.
அத்துடன், இத்தகைய ஏமாற்றுக்காரர்கள் பொதுவாக மோசடி செய்ய பயன்படுத்தும் செயலிகளில் தங்களின் அடையாளப் படமாக சிங்கப்பூர் காவல்துறை அதிகாரிகளின் படங்களை வைத்திருப்பர். சில வேளைகளில் ஏமாற்றுக்காரர்கள் காவல்துறையினரின் சீருடையை அணிந்து செயலியில் காணொளி வழி அழைப்பர்.
தங்களின் மோசடிச் செயல்கள் உண்மையானவை என்று பிறரை நம்பவைக்க இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இவ்வாறு அழைத்து ஏமாற்றுக்காரர்கள் தாங்கள் குறிவைப்போரின் தனிப்பட்ட விவரங்கள், வங்கிக் கணக்குத் தகவல்கள் போன்றவற்றைக் கேட்பதுண்டு. விசாரணைக்காக இவற்றைக் கேட்டுத் தெரிந்துகொள்வதாக ஏமாற்றுக்காரர்கள் கூறுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
அதற்குப் பிறகு ஏமாற்றுக்காரர்கள் 'டிபிஎஸ் பேலா' போன்ற செயலிகளின் மூலம் மின்பணப்பையை உருவாக்கி அதில் ஏமாற்றப்பட்டவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து நிரப்புவர்.
தொலைபேசி அழைப்பின் மூலம் அரசாங்க அமைப்புகள் தனிப்பட்ட தகவல்களைக் கேட்காது என்பது வலியுறுத்தப்படுகிறது.

