வரும் திங்கள்முதல் இரண்டு வாரங்களுக்கு நாடாளுமன்ற அமர்வில் புதிய நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்ட 2022 அறிக்கை தொடர்பிலான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருள், சேவை வரி விகிதத்தை உயர்த்துதல், அதிகரிக்கும் வரிகளிலிருந்து நிவாரணம் அளிக்கும் திட்டங்கள், வெளிநாட்டு ஊழியர் கொள்கைகளில் மாற்றங்கள் போன்றவை இவ்வாண்டு பெரிதும் விவாதிக்கப்படும்.
நிதியாண்டு ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் தொடங்கவுள்ள நிலையில் முதல் மூன்று நாள்களில் வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் கவனம் செலுத்தப்படும்.
'ஒன்றுசேர்ந்து முன்னேற்றத்திற்கான புதிய பாதையை அமைப்போம்' என்ற கருப்பொருளில் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் கடந்த வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
வரும் வாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் வெவ்வேறு அம்சங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவர். அதை அடுத்து, புதன்கிழமையன்று எம்.பி.களின் கருத்துகள் தொடர்பில் திரு வோங் பதிலளிப்பார்.
அதையடுத்து, வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்.
பின்னர், தத்தம் அமைச்சுகள் சார்பில் வெவ்வேறு அமைச்சர்கள் தங்களின் வரவுசெலவு மதிப்பீடுகளை முன்வைப்பர். எம்.பி.கள் ஆராய்ந்து தங்களின் கருத்துகளைத் தெரிவிப்பர்.
விவாதம் மார்ச் 10ஆம் தேதியன்று முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

