சிங்கப்பூரின் உற்பத்தித் துறை தொடர்ந்து நான்காவது மாதமாக ஜனவரியில் வளர்ச்சி கண்டது. இருப்பினும், வளர்ச்சி வேகம் மெதுவடைந்துள்ளது.
ஆண்டு அடிப்படையில் உற்பத்தித் துறை 2% வளர்ச்சி கண்டது. கடந்த டிசம்பர் மாதத்தில் பதிவான 16.7% வளர்ச்சியை ஒப்புநோக்க, ஜனவரி மாதம் பதிவான வளர்ச்சி விகிதம் மிகக் குறைவாக உள்ளது.
பொருளியல் வளர்ச்சிக் கழகம் நேற்று வெளியிட்ட தரவுகள் மூலம் இது தெரியவந்தது.
உற்பத்தித் துறை 11.6% வளர்ச்சி காணும் என்று புளூம்பெர்க் கணக்கெடுப்பில் ஆய்வாளர்கள் முன்னுரைத்ததையும் ஜனவரியில் அடைய முடியவில்லை.
உயிரியல் மருத்துவ உற்பத்தியைத் தவிர, இதர துறைகளில் கடந்த மாதம் மொத்தம் 4.7% வளர்ச்சி பதிவாகியது.
உயிரியல் மருத்துவ உற்பத்தியில் 10.6% சரிவு பதிவானது. டிசம்பரில் 90.5% உயர்வு பதிவானதை அடுத்து இச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மருத்துவச் சாதனங்களுக்கான ஏற்றுமதித் தேவை அதிகரித்ததால் மருத்துவத் தொழில்நுட்பப் பிரிவு 1.1% வளர்ச்சி கண்டது. இருப்பினும், உயிரியல் தயாரிப்புகள் குறைந்திருந்ததால் மருந்து உற்பத்தி 18% சுருங்கியது.
அனைத்துலக பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில் வான்வெளிப் பிரிவில் ஆண்டு அடிப்படையில் 25.8% வளர்ச்சி பதிவாகியது.

