செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
164e4310-5d9c-4bd3-bd97-4c5766f85ac8
-

மஹா சிவராத்திரியை முன்னிட்டு

மார்ச் 1, 2 தேதிகளில் சாலை மூடல்

மஹா சிவராத்திரியை முன்னிட்டு கேலாங் ஈஸ்ட் சென்ட்ரல் மற்றும் கேலாங் ஈஸ்ட் அவென்யூ 3 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட சாலைப் பகுதி, போக்குவரத்துக்கு மூடப்படும். செவ்வாய்க்கிழமை, மார்ச் 1 அன்று மாலை 5 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 5 மணி வரை இச்சாலைப் பகுதி மூடப்பட்டிருக்கும் என்று காவல் துறையினர் நேற்று தங்களின் அறிக்கை வழி தெரிவித்தனர். இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள மஹா சிவராத்திரி விழாவுக்காக சாலை மூடப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டனர். மேல்விவரம் பெற, விழா ஏற்பாட்டாளரான ஸ்ரீ சிவன் கோவில் நிர்வாகத்துடன் 6743 4566 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

எஸ்பிஎச் மீடியா குழுமத்திற்கு ஆறு புதிய இயக்குநர்கள்

எஸ்பிஎச் மீடியா குழுமத்திற்கு ஆறு புதிய இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திரு பஹரேன் ஷாரி, திருவாட்டி இலேன் யூ, திரு பிலிப் லீ, திரு லீ யி ஷியான், திருவாட்டி லிம் மெய், திரு மேக்ஸ் லோ ஆகிய அறுவரும் அடுத்த மாதம் 1ஆம் தேதி­யன்று பதவியேற்­பர். புதிய இயக்குநர்கள் பலதரப்பட்ட அனுபவங்களையும் சிந்தனையையும் கொண்டுள்ளவர்கள் என எஸ்­பிஎச் மீடியா குழு­மத்தின் தலைவரான திரு கோ பூன் வான் கூறினார். தமிழ் முரசு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், பெரித்தா ஹரியான், சாவ்பாவ் உள்ளிட்ட செய்தித்தாள்களை எஸ்பி­எச் மீடியா குழுமம் வெளியிட்டு வருகிறது.

மருத்துவமனையில் நோயாளி எண்ணிக்கை அதிகரிப்பு

மருத்துவமனையில் கொவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று முன்தின நிலவரப்படி மருத்துவமனையில் மொத்தம் 1,615 கொவிட்-19 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். புதன்கிழமையன்று 1,587 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் குறைந்தது 40 பேர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, நேற்று முன்தினம் மேலும் 12 கொவிட்-19 உயிரிழப்புகள் பதிவாகின.