கருத்தாய்வு ஒன்றில் பங்கேற்றால் ரொக்கம், விமானத்தில் பயணம் மேற்கொள்வதற்கான 'ஏர்மைல்ஸ்' சலுகை ஆகியவை வழங்கப்படும் என்று கூறும் மின்னஞ்சல் 'டிபிஎஸ்' வங்கிக்குச் சொந்தமான 'பிஓஎஸ்பி' வங்கியின் வாடிக்கையாளர்கள் சிலருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
வாடிக்கையாளர்கள் எவ்வளவு திருப்தியடைந்துள்ளனர் என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் கருத்தாய்வு நடத்தப்படுவதாக குறிப்பிடப்படும். பங்கேற்கும் 500 பேருக்கு ரொக்கமும் 'ஏர்மைல்ஸ்' சலுகையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படும்.
இது ஒரு மின்னஞ்சல் மோசடிச் செயல் என்று 'டிபிஎஸ்' நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. மின்னஞ்சலில் இடம்பெறும் போலி இணையத்தளத்தில் தங்களிள் தனிப்பட்ட தகவல்களைப் பதிவுசெய்தோரை உடனடியாக வங்கியைத் தொடர்புகொள்ளுமாறு 'டிபிஎஸ்' கேட்டுக்கொண்டது.
இந்தப் போலி இணையத்தளத்திற்குச் செல்வோர் தங்களின் தனிப்பட்ட தகவல்களையும் வங்கிக் கணக்கு விவரங்களையும் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுவர்.
அதற்குப் பிறகு ஒருமுறை பயன்படுத்தப்படும் மறைச்சொல்லைக் குறிப்பிடுமாறு கேட்கப்படும். இந்த விவரங்களைக் கொண்டு ஏமாற்றுக்காரர்கள் பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைப் பயன்படுத்தலாம். என்று 'டிபிஎஸ்' அதன் இணையத்தளத்தில் தெரிவித்தது.
இந்த மோசடிக்கு யாரேனும் சிக்கினார்களா என்பது குறித்து 'டிபிஎஸ்' தகவல் ஏதும் வெளியிடவில்லை. இணைய முகவரிகளுடன் 'டிபிஎஸ்', 'பிஓஎஸ்பி' இரண்டும் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சலோ குறுந்தகவலோ அனுப்பாது என்று 'டிபிஎஸ்' வலியுறுத்துகிறது.