ஒரு தகறாரின்போது சக ஊழியரின் விரலைக் கடித்த கட்டுமான ஊழியர் லோகன் கோவிந்தராஜுக்கு 10 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
42 வயது முத்து செல்வனின் விரலின் ஒரு பகுதியைத் தற்போது 31 வயதாகும் லோகன் கடித்திருக்கிறார். சம்பவ இடத்தில் திரு முத்துவின் விரல் பாகம் காணப்பட்டது. ஆனால் மருத்துவர்களால் அதை மறுபடியும் ஒட்டவைக்கமுடியவில்லை.
இருவரும் வசித்த வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்குவிடுதியில் இருந்த மற்ற ஆண்களுடன் திரு முத்து பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக லோகன் தவறாகக் கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து வந்த தகறாரில் இச்சம்பவம் நிகழ்ந்தது. இருவரும் இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்கள்.
இச்சம்பவம் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி மாலை நான்கறை மணிக்கு நிகழ்ந்தது. திரு முத்து, லோகன், மற்றொரு வெளிநாட்டு ஊழியர் மூவரும் லாரி ஒன்றில் மது அருந்தியபடி பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தனர். கிராஞ்சி கிரெசண்ட் பகுதியில் இருக்கும் அவர்கள் வசித்த தங்குவிடுதிக்கு அருகே லாரி நிறுத்தப்பட்டிருந்தது.
மதுபோதை அதிகமான பிறகு லோகன், திரு முத்து மற்ற ஊழியர்களுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாகக் கூறியிருக்கிறார். பொய் சொல்வதை நிறுத்திவிட்டு அவ்விடத்திலிருந்து செல்லுமாறு திரு முத்து லோகனைக் கேட்டுக்கொண்டார். அதற்குப் பிறகு ஏற்பட்ட தகறாரில் லோகன் திரு முத்துவின் விரலில் ஒரு பகுதியைக் கடித்தார்.
இச்சம்பவம் நிகழ்ந்தபோது லோகன் குறைந்தது மூன்று குவளைகள் மதுபானம் அருந்தியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
வேண்டுமென்றே ஒருவரை மோசமாகக் காயப்படுத்தியதாகத் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை லோகன் ஒப்புக்கொண்டார்.
இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுச் சிறைத் தண்டனையும் அபராதம் அல்லது பிரம்படியும் விதிக்கப்படலாம்.

