வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த விரும்பும் முதலாளிகள் அவர்களது குறைந்த பட்ச சம்பளத்தை மீண்டும் உயர்த்தும் சூழ்நிலையை எதிர்நோக்குகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இந்த குறைந்த பட்ச சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 18ஆம் தேதி நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் சிங்கப்பூர் வரவு செலவு திட்ட அறிக்கையை வெளிட்டார். அதில் அறிவித்த மாற்றங்களின்படி தகுதி பெறும் சம்பளம் $500 வரை உயரக்கூடும்.
புதிய எஸ் பாஸ் விண்ணப்பங்களுக்கு தகுதி பெறும் குறைந்த பட்ச ஊதியம் தற்போது இருக்கும் $2,500லிருந்து $3,000க்கு உயர்த்தப்படும். இந்த மாற்றம் வரும் செப்டம்பர் மாதம் அமலாக்கப்படும்.
நிதித்துறைக்கு இந்த தகுதி பெறும் குறைந்த பட்ச ஊதியம் இன்னும் கூடுதலாக $3,500 ஆக நிர்ணயிக்கப்படும். வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் அமர்த்தும் முதலாளிகள், அத்தகைய ஊழியர்களுக்கு விரைவில் குறைந்த பட்சமாக அதிக சம்பளத்தைக் கொடுக்க வேண்டியிருக்கும்.
புதிய எம்பிளாய்மண்ட் பாஸ் விண்ணப்பங்களுக்குத் தகுதி பெற குறைந்தபட்ச சம்பளம் இவ்வாண்டு செப்டம்பர் முதல் $5,000ஆக உயரும். இப்போது இந்தச் சம்பளம் $4,500ஆக இருக்கிறது.
நிதிச் சேவைத் துறைகளைப் பொறுத்தவரை இந்தக் குறைந்தபட்ச சம்பள அளவு $5,000லிருந்து $5,500ஆகக் கூடும். ஆற்றல் மிகுந்த, பொருத்தமானவர்கள் எம்பிளாய்மண்ட் பாஸ் அனுமதியைப் பெறுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அப்போதைக்கு அப்போது அவர்களுக்கான தொடக்க சம்பளம் சரிசெய்யப்படுகிறது.
இந்த மாற்றங்களால் சிங்கப்பூருக்கு சரியான, திறமையான வெளிநாட்டு ஊழியர்களை ஈர்க்க முடியும் என்றும் இது நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத் திட்டங்களை மறுஆய்வு செய்வதற்குக் கூடுதல் நேரம் கொடுக்கும் என்றும் நம்பப்படுகிறது.
எம்பிளாய்மண்ட் பாஸ் விண்ணப்பங்களை மதிப்பிடும் முறையும் சீரமைக்கப்படும்
குறைந்தபட்ச சம்பளம் ஒருபுறம் இருக்க, எம்பிளாய்மண்ட் பாஸ் விண்ணப்பங்களை மதிப்பிடும் முறையும் சீரமைக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். சிங்கப்பூரர்களிடத்தில் முதலீடு செய்யும் அதே வேளையில், நாம் தொடர்ந்து திறந்த நிலையில் இருந்து, உலகம் முழுவதிலும் இருந்து ஆற்றல்மிக்கவர்களை ஈர்க்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
வெளிநாட்டு ஊழியர்களை அதிகம் சார்ந்திருக்கும் கட்டுமானம், பதனீட்டு தொழில்துறைகளுக்கான 'ஒர்க்பர்மிட்' கொள்கைகள் சரிசெய்யப்படும். எடுத்துக்காட்டாக 2024 ஜனவரியில் இருந்து சார்ந்திருப்போர் விகித வரம்பு அல்லது ஒரு நிறுவனம் நியமிக்கக்கூடிய வெளிநாட்டு ஊழியர்களின் வரம்பு 87.5%லிருந்து 83.3%ஆகக் குறைக்கப்படும்.
மனிதவள அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது பல்வேறு வெளிநாட்டு ஊழியர் கொள்கை மாற்றங்கள் பற்றிய மேல்விவரங்கள் அறிவிக்கப்படும்.
நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புத் தகவல்கள் தமிழ் முரசு இணையப்பக்கத்தில்...: https://www.tamilmurasu.com.sg/jobs

