உக்ரேனில் ரஷ்ய அதிபரின் அடாவடித்தனம் நிறுத்தப்பட வேண்டும்

உக்ரேனில் ரஷ்ய அதிபரின் அடாவடித்தனம் நிறுத்தப்பட வேண்டும்

4 mins read
8fa57e14-1c42-4dff-8d6b-90b8d6c6d39c
-

கொவிட்-19 தொற்று கார­ண­மாக ஒடுங்­கிப்­போய்­ஒன்­றும் தெரி­யா­மல்­ த­விக்கும் உலகம் ஓர­ளவு மீண்டு வரும் நேரத்­தில் திடீ­ரென்று அதை­விட பெரும் பூத­மாக ஐரோப்­பா­வில் போராயுதம் வெடிக்கத் தொடங்கி, போர் சத்­தம் கிளம்பிவிட்டது.

உல­கப் பொரு­ளி­யல் இன்­ன­மும் நிமிர்ந்­து நிற்­க­ வில்லை. எப்­படி தலை தூக்­கு­வது என்பது புரியாமல் உல­கமும் அதன் ஒரு பகுதியான ஐரோப்­பா­வும் மெல்லமெல்ல மீட்சிப் பாதைக்குத் திரும்புகின்றன.

இந்த நிலை­யில் யாருமே ஏற்­றுக்கொள்ள முடி­யாதபடி ரஷ்ய அதி­பர் புட்­டின் பக்­கத்­தில் இருக்­கும் உக்­ரேன் மீது போர் தொடுத்­து­ ஐரோப்பாவின் அமைதியைக் கெடுத்துவிட்டார்.

எல்­லைப் பகுதிகள், யாருக்­குச் செல்­வாக்கு போன்ற பழைய பத்­தாம்­பசலி கார­ணங்­களை முன் வைத்து புட்­டின் கிளப்பி இருக்­கும் இந்­தப் போர் எப்­படி, எங்கு, எவ்­வி­தம் முடி­யப்போகிறது என்­பது தெரி­யா­மல் உலக நாடு­கள் மேலும் ஓர் அச்­சத்தை, புதி­தாக ஒரு மிரட்­டலை கண்டு நடுங்­கத் தொடங்கி இருக்­கின்­றன.

உல­கப் போருக்­குப் பிறகு இது நாள்­வரை அமைதி­ யாக இருந்து வந்த ஐரோப்­பா­வின் நிம்­ம­தி­யைக் கெடுத்து தனது பழைய சோவி­யத் யூனி­யன் சித்­தாந்­தத்­துக்கு ஆத­ர­வாக புட்­டின் கையில் எடுத்து இருக்­கும் போரா­யு­தம் ஐரோப்­பாவை மட்­டு­மின்றி உலகை என்ன கதிக்கு ஆளாக்­கப்­போ­கி­றதோ என்­பதைக் கணிக்க இப்­போதைக்கு இய­ல­வில்லை.

அதி­பர் புட்­டின் எடுத்­துள்ள போர் முடி­வைப் போல அதே முடி­வை ­எ­டுக்­கும் நிலை­யில் ஐரோப்பிய கூட்­டணி இல்லை. அப்­படி ஐரோப்­பிய கூட்­ட­ணி­யும் களத்­தில் குதித்­தால் ஐரோப்­பிய கண்­டத்­தி­லும் உல­கி­லும் யாருமே விரும்­பாத வேண்­டாத விளை­வு­கள் ஏற்­பட்­டு­வி­டும் என்­ப­திலும் ஐய­மில்லை.

இப்­ப­டிப்­பட்ட ஒரு ­சூ­ழல் ஏற்­ப­டு­வ­தைத் தடுக்க, தவிர்க்­கவே ஐரோப்­பியக் கூட்­டணி நாடு­களும் அதன் ஆத­ர­வான அமெ­ரிக்கா உள்­ளிட்ட நாடு­களும் விரும்­பு­கின்­றன என்­பதை ரஷ்ய அதி­பர் புட்­டின் உணர்ந்­து­கொண்­டு­தான் உக்­ரேன் ஆக்கி­ர­மிப்புச் செயலை அரங்­கேற்றி இருப்­பார்.

சோவி­யத் யூனி­யன் இருந்­த­போது அதன் ஒரு பகுதியாக உக்­ரேன் இருந்­தது. பிறகு உக்­ரேன் தனி நாடாக பிரிந்­தது. என்றாலும்கூட உக்ரேனில் வேண்­டாத விஷம வேலை­களை அப்­போ­தைக்கு அப்­போது செய்­த­ப­டி­யே­தான் ரஷ்ய அதிபர் புட்­டின் இருந்து வந்­தார்.

கிழக்கு ஐரோப்­பிய நாடான உக்­ரேன், மேற்கு ஐரோப்பா நாடு­க­ளின் சுதந்திரத்தை, பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த ஏற்­ப­டுத்­தப்­பட்ட நேட்டோ என்ற அமைப்­பில் சேரக்­கூ­டாது; உக்­ரேன் நடு­நி­லை­யான நாடாக இருக்­க­வேண்டும்; அதா­வது அந்நாட்டில் ராணுவ சக்தி அகற்­றப்­பட வேண்­டும் என்று வலி­யு­றுத்தி, அந்தச் சாக்­கில் அதி­பர் புட்­டின் உக்ரேன் மண்­ணில் மூன்று திசை­களில் இருந்­தும் உள்­ளே நுழைந்­தி­ருக்­கி­றார்.

உயிர் பலி, பொருட்­சே­தத்தை ஏற்­ப­டுத்தி வரு­கி­றார். புட்­டி­னின் இந்த அடா­வ­டிச் செயலை, உலக நாடு­கள் மட்­டு­மின்றி ரஷ்ய மக்­க­ளே­கூட எதிர்க்­கி­றார்­கள். உக்­ரேன் மீது படை தொடுக்­கும் படு­பா­த­கச் செயலை செய்ய வேண்­டாம்; அப்­படி போர் தொடுத்­தால் இந்த நூற்­றாண்­டி­லேயே ஆக­மோ­ச­மாகிவிடக்­கூ­டிய அந்தப் போர் கார­ண­மாக உல­கிற்கு ஏற்­படக்­கூ­டிய பாதிப்­பு­கள் பேர­ழி­வாக இருக்­கும் என்று தொடக்­கத்­தி­லேயே ஐநா தலை­மைச் செய­லா­ளர் ஆண்டனி குட்டரஸ், அதி­பர் புட்­டினை எச்­ச­ரித்து இருந்­தார்.

அது­வும் கொவிட்-19 கார­ண­மாக படுபாதா­ளத்தில் விழுந்­து­விட்ட உல­க­மும் வளர்ந்த நாடு­களும் முழு மீட்சி அடைய கால­அ­வ­கா­சம் தேவை. ஆகை­யால் இந்த நேரத்­தில் போர் தொடுப்­பது இன்­னும் மோச மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தும் என்று அவர் எடுத்துக்கூறி இருந்­தார்.

போர் கார­ண­மாக எண்­ணெய் விலை மேலும் உயர்ந்­து­வி­டும்; உக்­ரே­னின் கோதுமை ஏற்­று­மதி தடை­படும்; வட்டி விகி­தம் உய­ரும். இத­னால் உலக சந்­தை­கள் ஆட்­டம் காணும் என்­றெல்­லாம்கூட அவர் தெரி­வித்து இருந்­தார். இவை எல்­லாமே ரஷ்­யாவை­யும் பாதிக்­கும் என்­றா­லும்­ அதைப் பற்றி எல்­லாம் பொருட்­ப­டுத்­தா­மல் ரஷ்ய அதி­பர் போரா­யு­தங்­களை கையில் எடுத்­து­விட்­டார்.

ரஷ்­யா­வின் இந்த முடிவை சிங்­கப்­பூ­ரும் கடு­மை­யாகக் கண்­டித்­தது. உக்­ரேன் நாட்­டின் இறை யாண்மையையும் சுதந்­தி­ர­மும் எல்­லை­களும் மதிக்­கப்­பட வேண்­டும் என்று சிங்­கப்­பூர் வலி­யு­றுத்­தி­யது.

உட­ன­டி­யாக ராணுவ நட­வ­டிக்­கை­கள் முடி­வுக்கு வந்­து­வி­டும் என்று சிங்­கப்­பூர் நம்­பிக்கை தெரி­வித்­தது. ஐநா சாச­னத்­தின்­ப­டி­யும் அனைத்­து­லக சட்டங்­களுக்கு ஏற்­ப­வும் அமை­தி­யான முறை­யில் ஒரு தீர்வு ஏற்­பட வேண்­டும் என்­றும் சிங்­கப்­பூர் வலி­யுறுத்­தி­யது. ரஷ்யா போர் தொடுப்­ப­தற்கு முன்­பாகவே அதைக் கணித்த அமெ­ரிக்கா, உள்­ளிட்ட பல நாடு­களும் ரஷ்­யா­வுக்கு எதி­ராக கடு­மை­யான பல பொரு­ளியல் தடை­களை அமல்­ப­டுத்­தின.

ஐரோப்­பா­வில் இருக்­கும் அதி­பர் புட்­டி­னின் சொந்த சொத்­து­க­ளை­யும் ஐரோப்­பிய ஒன்­றி­யம் முடக்கிவிட்டது. அனைத்­து­லக சமூ­கம் நடை­முறைப்­படுத்திவரும் அத்­த­கைய கடு­மை­யான பொரு­ளியல், நிதித் தடைகள் விளை­வு­களை ஏற்­ப­டுத்த கொஞ்சம் காலம் பிடிக்­க­லாம். அத­னால் ரஷ்யா தன்­னு­டைய போர் நட­வ­டிக்­கை­க­ளின் வேகத்­தைக் குறைத்­துக்கொள்­ளும் சூழ்­நிலைகூட வர­லாம்.

இருந்தாலும் ரஷ்யாவைக் கட்டுப்படுத்த இதுவரை விதிக்கப்பட்டுள்ள தடைகள் மட்­டுமே போதாது. ரஷ்­யா­வின் நாண­யம், சந்­தை­கள், கேந்­திர முக்கியத் துவம் வாய்ந்த சொத்­து­கள், பொரு­ளி­யல் அனைத்தை­யும் செம்­மை­யா­கப் பாதிக்­கக்­கூ­டிய மேலும் தண்டனை­கள் இடம்­பெற வேண்­டும் என்­பது அவசர அவ­சி­ய­மாகி இருக்­கிறது.

உலக நாடு­கள் உக்­ரே­னில் நேர­டி­யாக படை­பலத்தை இறக்கி அந்த நாட்­டுக்கு உதவி ரஷ்ய ஆக்­கி­ர­மிப்­பைத் தடுத்து நிறுத்த முயல்­வது விவே­க­மாக இருக்­காது.

இத்­த­கைய ஒரு நிலை­யில், போர் மதம் பிடித்த, யானை போன்ற பலம் கொண்ட ரஷ்­யாவை சொந்­த­மாக எதிர்த்து நின்று தன் எல்­லை­க­ளைத் தற்­காத்­துக்­கொள்ள தன்­னால் முடிந்த ஆன அனைத்­தை­யும் செய்து உக்­ரேன் போராடி வரு­கிறது.

அதி­பர் புட்­டின் வேறு ஒரு நாட்­டின் இறை யாண்மை உரி­மையை மீறி செயல்­ப­டு­கி­றார். இது முற்றி­லும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத ஒரு செயல். இதை ரஷ்யா உட­ன­டி­யாக நிறுத்­திக்­கொள்ள வேண்­டும். இதற்கு ஏது­வாக, ரஷ்­யா­வின் சக்தி வாய்ந்த நட்பு நாடு­கள் உள்­ளிட்ட உலக நாடு­கள் அனைத்தும் உக்­ரேன் போரைத் தடுத்து நிறுத்த முயல வேண்டும்.

அதோடு மட்­டு­மின்றி, உக்­ரே­னுக்கு பொருளியல் ரீதி­யி­லும் நிதி ரீதி­யி­லும் உதவ அவை முன்­வர வேண்­டும்.