புதிய வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற்று இருக்கும் பரந்த அளவிலான பல்வேறு திட்டங்களில் பெரும்பாலானவை குறைந்த வருவாய் பிரிவினருக்குப் பலன் அளிக்கும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
நடுத்தர வருவாய் பிரிவினரும் தாங்கள் செலுத்தும் வரிக்கு ஈடாக கணிசமான நன்மைகளைப் பெறுவார்கள் என்று அமைச்சர் இன்ஸ்டகிராமில் குறிப்பிட்டார்.
அண்மையில் தாக்கலான புதிய வரவுசெலவுத் திட்டம் பற்றி இணையம் மூலம் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்குப் பதில் அளித்து அமைச்சர் தன் கருத்துகளை வெளியிட்டார்.
வரி உயர்வு காரணமாக ஏழைகளே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று ஒருவர் இணையத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.
அதற்கு விளக்கம் அளித்த அமைச்சர், குடும்ப ஆதரவுத் திட்டம், குடும்பங்களுக்குப் பயனீட்டு கட்டணக் கழிவுகளை வழங்கும்.
அதோடு அத்தகைய குடும்பங்கள் பற்றுச்சீட்டுகளையும் பெறும். அத்தகைய குடும்பங்களைச் சேர்ந்த சிறார் கல்வி கற்கவும் உதவி கிடைக்கும் என்று அமைச்சர் விளக்கினார்.
அந்தப் பற்றுச்சீட்டுகளைக் கொண்டு சிங்கப்பூர் குடும்பங்கள் அன்றாட செலவுகளைச் சமாளிக்கலாம். அவற்றைக் குடியிருப்பு வட்டாரக் கடைகளிலும் உணவங்காடிகளிலும் பயன்படுத்த முடியும்.
அதோடு அத்தகைய பிரிவினர், மேம்படுத்தப்பட்ட உத்தரவாதத் திட்டத்தின் மூலம் கணிசமான அளவிற்கு அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு உதவி பெறுவார்கள்.
இவற்றுக்கெல்லாம் அப்பால் மேம்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டமும் இதர பல திட்டங்களும் குறைந்த வருவாய் ஊழியர்களுக்கு நிரந்தர உதவியை வழங்கும் என்று அமைச்சர் கூறினார்.
ஆகையால் மொத்தமாக பார்க்கையில், சிங்கப்பூரில் குறைந்த வருமானம் உள்ள பிரிவினருக்கு கணிசமான அளவிற்கு நிரந்தர உதவிகள் கிடைக்கும் என்று திரு வோங் விளக்கினார்.

