ஐந்து சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களின் மாணவர் சங்கங்கள் புதிய கட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளன.
இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கையாளுவது அதன் நோக்கம். மனநலம், வேலைபெறும் தகுதி, சுற்றுச்சூழல் போன்றவை அந்தப் பிரச்சினைகளில் அடங்கும்.
அந்தப் புதிய அமைப்பு, 'பல்கலைக்கழகங்கள் தழுவிய கட்டமைப்பு' என்று குறிப்பிடப்படும்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தொழில்நுட்ப வடிவமைப்புப் பல்கலைக்கழகம், யேல்-என்யுஎஸ் பள்ளி ஆகியவற்றின் தலைவர்கள் புதிய கட்டமைப்பில் உள்ளனர்.
யேல்-என்யுஎஸ் பள்ளி, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இருந்தபோதிலும் அது தனியாக மாணவர் சங்கத்தைக் கொண்டுள்ளது. பல்கலைக்கழகங்களை ஒருங்கே கொணர்ந்து, இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களின், தேசிய அளவில் இளையர்களின் நலன்களைப் பாதுகாப்பது புதிய கட்டமைப்பின் நோக்கம்.
தேசிய இளையர் மன்றத்துடன் சேர்ந்து செயல்பட்டு புதிய கட்டமைப்பு உருவாகி இருப்பதாக மாணவர் சங்கத் தலைவர்கள் கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.
என்டியுசி சென்டரில் நேற்று நடந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் புதிய கட்டமைப்பு தொடங்கப்பட்டது.
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றில் மாணவர் சங்கங்கள் இல்லை. ஆகையால், அவை புதிய கட்டமைப்பில் முறைப்படி சேரவில்லை. இருந்தாலும் அந்த உயர் கல்வி நிலையங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் சேர்ந்து புதிய கட்டமைப்பு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டமைப்பு, மாணவர் சங்கங்களுக்கு இடையில் கூட்டுச் செயல்பாடுகளை அதிகமாக்கி, மாணவர் தலைமைத்துவம் பற்றிய அறிவைப் பகிர்ந்துகொள்ளும்.

