புதுமெருகுடன் மீண்டும் சேவையில் இணையும் ரயில்

புதுமெருகுடன் மீண்டும் சேவையில் இணையும் ரயில்

1 mins read
a410462c-e406-48d1-856a-d5fbfc215d7c
-

வடக்கு கிழக்குப் பாதையில் 2003ஆம் ஆண்டு சேவையாற்றத் தொடங்கிய ரயில் ஒன்று, மூவாண்டு மேம்பாட்டுக்குப் பிறகு நாளை (பிப்ரவரி 28) மீண்டும் சேவையில் இணைந்துள்ளது.

பொதுவாக 30 ஆண்டுகள் சேவையாற்றும் திறன்கொண்ட ரயில்களை, 15ஆம் ஆண்டுக்குப் பிறகு மேம்படுத்தி புதுப்பொலிவூட்ட முன்னரே திட்டமிடப்பட்டிருந்தது. அதன்கீழ் 2018ஆம் ஆண்டு, புதுப்பிப்புக்கு அடையாளம் காணப்பட்ட 25 ரயில்களில் சேவைக்குத் திரும்பியிருக்கும் முதல் ரயில் அது.

செங்காங்கில் உள்ள எஸ்பிஎஸ் டிரான்ஸிட் ரயில் பணிமனையில், 116 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான செலவில் ரயில்களுக்கு புதுமெருகூட்டப்படுகிறது.

ரயிலின் இருக்கைகள், கைப்பிடிகள், புதிய எல்ஈடி விளக்குகள் உள்ளிட்டவை மாற்றப்பட்டுள்ளன. நான்கு பெட்டிகளில், நிற்கும் பயணிகள் சாய்ந்துகொள்வதற்கான வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

பயணப் பாதைக் குறிப்புகளுக்கான ஒட்டுவில்லைகள் அகற்றப்பட்டு, மின்னிலக்க முறையில் அவை காட்டப்படுகின்றன. நிலையத்தில் ரயில் நிற்கும்போது எந்தப் பக்கம் கதவு திறக்கும் என்பதைக் காட்டும் வசதியும் இடம்பெற்றுள்ளது. ரயிலின் செயல்திறனைக் கண்காணிக்கும் கட்டமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது.

முதல் ரயிலைத் தொடர்ந்து பணிமனையில் அடுத்த ரயிலுக்கான புதுப்பிப்புப் பணிகளும் தொடங்கிவிட்டன. மொத்தம் 25 ரயில்களுக்குமான மேம்பாட்டுப் பணிகள் 2024ல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.