நிதிப் பிரச்சினையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிடிஓ எனப்படும் தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் வீட்டுத் திட்டங்கள் இரண்டு நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கிரேட்எர்த் கார்ப்பரேஷன், கிரேட்எர்த் கன்ஸ்ட்ரக்ஷன் என்னும் கட்டுமானக் குத்தகை நிறுவ னத்திடம் அந்தத் திட்டங்கள் இருந்தன. ஆனால் நிதிப் பிரச்சினை காரணமாக அத்திட்டங்களைக் கைவிடுவதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவை அறிவித்தன. செஞ்சா வட்டாரத்தில் உள்ள செஞ்ஜா ரிட்ஜஸ், செஞ்ஜா ஹைட்ஸ் ஆகிய இரு திட்டங்களும் தற்போது வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உள்ளதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்து உள்ளது.
அதனைத் தொடர்ந்து மூன்று புளோக்குகளைச் சேர்ந்த 782 வீட்டு உரிமையாளர்கள் தங்களது புதிய வீட்டுக்கான சாவியைப் பெறத் தொடங்கியுள்ளனர்.
தாமதமடைந்த மேலும் மூன்று பிடிஓ திட்டங்கள் நல்லமுறை யில் ெசயல்பட்டு வருவதாகவும் திருத்தப்பட்ட கால அவகாசப்படி அவற்றை முடிப்பதற்கான பணிகள் நடைபெறுவதாகவும் கழகம் நேற்று கூறியது.
ஸ்கை விஸ்தா @ புக்கிட் பாத்தோக், மார்சிலிங் குரோவ் மற்றும் வெஸ்ட் கோஸ்ட் பார்க்வியூ ஆகியன அந்த மூன்று திட்டங்கள்.
இந்த ஐந்து பிடிஓ திட்டங்களும் மூன்று மாதங்கள் வரை தாமதத்தை எதிர்நோக்கின. அரசாங்க உதவி இருந்தும் 70 மில்லியன் கடனில் சிக்கியதாக கிரேட்எர்த் நிறுவனம் அறிவித்த பின்னர் இத்திட்டங்கள் மாற்றுக் குத்தகையாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன.
செஞ்ஜா ரிட்ஜஸ் திட்டத்தை டீம்பில்ட் எஞ்ஜினியரிங் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் நிறைவேற்றியது. இதில் ஒரே ஒரு புளோக் இடம்பெற்றுள்ளது. அந்த புளோக்கில் 230 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இத்திட்டம் கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் முடிக்கப்பட வேண்டியது.
அதேபோல மற்றொரு திட்டமான செஞ்ஜா ஹைட்ஸை நியூகான் பில்டர்ஸ் நிறைவேற்றி உள்ளது. இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள இரு புளோக்குகளில் 552 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இத்திட்டத்தை நிறைவேற்ற கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டு மற்றும் இவ்வாண்டின் முதல் காலாண்டு என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
கொவிட்-19 கொள்ளைநோய் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் பரவியதன் காரணமாக கட்டுமானத் துறை மோசமாகப் பாதிக்கப்பட்டது. அதனால் தாமதமடைந்த பிடிஓ திட்டங்களை நிறைவேற்றுவதற்கான பணிகளுக்கு வீவக கைகொடுத்து வருகிறது.
நிதிப் பிரச்சினையிலிருந்து விடுபட்டதால் வீட்டு உரிமையாளர்களிடம் சாவி ஒப்படைப்பு

