$726,000 மதிப்புள்ள 9 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனை நடவடிக்கையில் சுமார் 9 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு $726,000 என கணக்கிடப்பட்டுள்ளதாக நேற்று பிற்பகலில் சிஎன்பி கூறியது.
போதைப்பொருள்களில் 3.795 கிலோகிராம் கஞ்சா, 2.161 கிலோகிராம் ஐஸ், 474 கிராம் ஹெராயின், 220 கிராம் கொக்கைன், 167 கிராம் கெட்டாமைன், 774 கிராம் எக்டஸி மாத்திரைகள், 4,887 எரிமின்-5 மாத்திரைகள் ஆகியன அடங்கும். பிடிபட்டுள்ள கஞ்சாவின் அளவு சுமார் 540 போதைப் புழங்கிகளுக்கு ஒரு வாரத்திற்கு விநியோகிக்கக்கூடியதாக இருக்கும் என சிஎன்பி கூறியுள்ளது. அப்பர் சிராங்கூன் ரோட்டில் உள்ள தனியார் வீடு ஒன்றில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியபோது போதைப்பொருள் தொடர்பாக 21, 28, மற்றும் 31 வயதுடைய மூன்று ஆடவர்கள் சிக்கினர்.
கூடுதல்நேரம் செயல்பட்ட பலதுறை மருந்தகங்களில் கூட்டமில்லை
சிங்கப்பூரில் சனிக்கிழமை பிற்பகலில், கூடுதல் நேரம் திறந்திருந்த பலதுறை மருந்தகங்கள் சிலவற்றில் அதிகக் கூட்டமில்லை; இருப்பினும் தொடர்ந்து பல நோயாளிகள் பொது மருத்துவர்களைக் காணச் சென்றனர்.
பலதுறை மருந்தகங்கள் வார இறுதி நாள்களில் கூடுதல் நேரம் திறந்திருக்கும் என்பது தங்களுக்குத் தெரியாது என்று அவர்கள் கூறினர்.
கொவிட்-19 கிருமிப் பரவல் வெகுவாக அதிகரித்ததைத் தொடர்ந்து, நிலைமையைச் சமாளிக்க ஆறு பலதுறை மருந்தகங்கள் கூடுதல் நேரம் திறக்கப்பட்டுள்ளன.
புக்கிட் பாஞ்சாங், யூனூஸ், காலாங், பயனியர், பொங்கோல், உட்லண்ட்ஸ் ஆகிய பலதுறை மருந்தகங்கள் அவை. பிப்ரவரி 26 முதல், அடுத்த இரண்டு வாரங்களுக்கு, சனிக்கிழமை பிற்பகல் வேளைகளிலும், ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களிலும் நோயாளிகள் அவற்றை நாடலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
புதிய அறிவிப்பின் கீழ், சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணியில் இருந்து நண்பகல் வரையிலும் அந்த ஆறு பலதுறை மருந்தகங்களும் திறந்திருக்கும்.
இருப்பினும், கொவிட்-19 உறுதிசெய்யப்பட்ட நோயாளிகளுக்கும், தீவிர சுவாச நோய்க்கான அறிகுறிகள் உடையோருக்கும் மட்டுமே அவை சிகிச்சை அளிக்கும். பிப்ரவரி மாத மத்தியில் இருந்து அன்றாடக் கிருமித்தொற்றுச்
சம்பவங்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது.

