மாணவப் பருவத்தில் ஒருவருக்கு அதிக அழுத்தத்தைத் தரக்கூடியவை தேர்வுகள். சிலருக்கு வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நிர்ணயிப்பதாக அத்தேர்வுகள் அமையலாம்.
அண்மையில் மேல்நிலைத் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்ட
இந்த அறுவரும், தங்களின் லட்சியப் பாதையில் குறுக்கிட்ட சவால்களையும் அவற்றை எதிர்கொண்ட அனுபவத்தையும் பகிர்ந்துகொள்கின்றனர்.
தமிழாசிரியரான தம் தாயாரே தனக்கு வழிகாட்டி என்கிறார் அடைக்கப்பன் வள்ளியம்மை, 18. ஆனால் ஒரு கட்டத்தில் தமிழ் விருப்பப் பாடத்திட்டத்தில் சேர, தான் தயங்கியதாகக் கூறினார். இருப்பினும், தமிழ்மொழி மீதுள்ள ஆர்வத்துடன் உழைத்ததால் தனது மேல்நிலைத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் அவர் உச்சத் தேர்ச்சி பெற்றார்.
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயில வேண்டும் என்றதும் தொடக்கத்தில் பயமாக இருந்தது. தாயாரின் ஊக்குவிப்பு, தமிழ் ஆசிரியர் திரு வீரமுத்து கணேசன் தந்த உற்சாகம் இரண்டும் வள்ளியம்மைக்கு துணையாக இருந்தன.
தேர்வு எழுதும்போது நேர நிர்வாகத்தில் கவனம் செலுத்தப் பயிற்சி செய்த வள்ளியம்மை, படிப்படியாக தம் மதிப்பெண்களில் முன்னேற்றத்தைக் கண்டார். மொழித்திறன் மேம்பட, மனப்பாடம் செய்தல் முக்கியம் என்றாலும் படித்ததைப் புரிந்துகொண்டு பயன்படுத்துவது அதைவிட முக்கியம் என்பதை வள்ளியம்மை காலப்போக்கில் உணர்ந்தார்.
கர்நாடக வாய்ப்பாட்டு இசையைச் சிறு வயது முதல் கற்றுக்கொள்ளும் வள்ளியம்மை, தமிழ் விருப்பப்பாடத் திட்டத்தின்போது அந்தப் பாட்டுத் திறனையும் பயன்படுத்தினாராம்.
இலக்கிய நூல்களைக் கற்பதற்கு இசையும் நடிப்பும் வள்ளியம்மைக்குப் பயனுள்ள உத்திகளாக அமைந்தன.
மாணவர்களின் கனவுகளை நனவாக்கும் தமிழ் ஆசிரியராக எதிர்காலத்தில் பணியாற்ற விரும்புகிறார் வள்ளியம்மை.

