தொடர்ச்சியாக தூக்கமில்லாத இரவுகளால் ஹேனாவின் மன உளைச்சல் அதிகரித்தது. தேர்வு நேரம் நெருங்கும்போது நம்பிக்கை குலையும் நிலைக்கு ஆளாகவிருந்தார் அவர்.
"இரவெல்லாம் கண்விழித்துப் படித்தபோதும் சில சமயம் எனக்குப் பாடங்கள் புரியவில்லை. இறுதியாண்டுத் தேர்விலும் நான் சிறப்பாகச் செய்யாதது அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால், அந்நேரத்தில் என் பெற்றோர் என்மீது அன்பு மட்டுமே காட்டினர்," என்றார் இனோயா தொடக்கக் கல்லூரியில் பயின்ற 19 வயது ஹேனா கேரலின் சாலொமோன்ராஜ்.
கணினி, இயந்திர இணைப்பாட நடவடிக்கையின் நிர்வாகக் குழுவில் பொறுப்பேற்ற ஹேனாவுக்கு, தனது பயணத்தைவிட தன்னை நம்பி இருந்த மாணவர்களின் வெற்றிதான் முக்கியமாகத் தெரிந்ததாகக் கூறினார்.
போட்டிகளுக்காக குழு உறுப்பினர்களையும் மாணவர்களையும் தயார் செய்யும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறரின் எதிர்பார்ப்புகளைச் சமாளிப்பது கடினமாக இருந்ததாக ஹேனா பகிர்ந்துகொண்டார்.
இறுதியாண்டுத் தேர்வில் இயற்பியல் பாடத்தில் எதிர்பார்த்த அளவுக்குத் தேர்ச்சியடையாத நிலையில் பதற்றமடைந்தார் ஹேனா. உறுதியுடன் தொடர்ந்து நடைபோட்டால் நிச்சயம் சிறந்த மதிப்பெண்கள் கிட்டும் என்று தன்னுடைய இயற்பியல் ஆசிரியர் கூறிய அறிவுரை அவர் மனத்தைத் திடமாக்கியது.
கணினித் துறையில் பணியாற்ற விரும்பும் ஹேனா, தற்போது நிரலாக்க மொழியைப் பயின்று வருகிறார்.

