தொடக்கக் கல்லூரி வாழ்க்கையில் பல பொறுப்புகளை ஸ்ருதி சுமக்கத் தயாரானார். ஆனால் அவற்றைச் சமாளிப்பது அவ்வளவு எளிதன்று என்பதைக் காலப்போக்கில் உணர்ந்தார்.
அறிவியல் பாடத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்த ஸ்ருதி, நன்யாங் தொழில்நுட்பக் கல்லூரி ஏற்பாடு செய்த நன்யாங் ஆராய்ச்சித் திட்டத்தில் இணைந்தார். சூரிய மின்கலங்களுக்கு மாற்று வழிகளைக் கண்டறியும் ஆராய்ச்சியை மேற்கொண்ட அவருக்கு, விருதுகள் கிடைத்தன.
தொடக்கக் கல்லூரிப் பயணத்தில் தனக்கு ஏற்பட்ட சிக்கல்களைக் களைய உறுதுணையாக இருந்தவர் தன்னுடைய வகுப்பாசிரியர் என்றார் ஸ்ருதி.
"பிறரின் செயல்களை நாம் மாற்ற முடியாது. ஆனால் பதிலுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதை மாற்றிக்கொள்ள முடியும் என்று அவர் சொன்னது சவால்களை எதிர்கொள்ளும் தெளிவை எனக்குத் தந்தது," என்றார் ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தில் பயின்ற 18 வயது ஸ்ருதி முரளிக்கிருஷ்ணா.
குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கு உதவும் நோக்கில் பல்வேறு தொண்டூழியப் பணிகளிலும் ஸ்ருதி ஈடுபட்டுள்ளார். சிண்டா தொண்டூழியராக இருக்கும் இவர், தன் பள்ளியிலும் தலைமைத்துவப் பொறுப்புகளுடன் இதர நடவடிக்கைகளைக் கவனிக்கவேண்டியிருந்தது.
சிங்கப்பூரின் 'ஸ்டெம்' துறை எனக் குறிப்பிடப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதப் பிரிவுகளுக்குப் பங்காற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார் ஸ்ருதி.

