மேல்நிலைத் தேர்வுக்கு ஒரு வாரமே இருந்த நிலையில் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பதை அறிந்தார் ஸ்ரீநிதி.
தன் சுகாதாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு நண்பரின் வீட்டில் தங்கி படிக்கவேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது.
முதல் வாரத் தேர்வுகளைக் குடும்பத்தினரிடமிருந்து விலகியிருந்த நிலையில் எழுதினார் ஸ்ரீநிதி. தீபாவளியைக்கூட தன் குடும்பத்தாருடன் கொண்டாட இயலாமல் போனது.
"என் தொடக்கக் கல்லூரி வாழ்க்கையின் ஒரு முக்கியக் கட்டத்தில் என் குடும்பத்தினர் அருகில் இல்லாதது வேதனை அளித்தது. ஓர் அறையில் தனியாகப் படித்துக்கொண்டிருந்த எனக்கு, என் நண்பரின் குடும்பத்தினர் பெரும் ஆதரவாக இருந்து அன்பாகப் பார்த்துக்கொண்டனர்," என்று தேசிய தொடக்கக் கல்லூரியில் பயின்ற 19 வயதான ஸ்ரீநிதி சுரேஷ்குமார் குறிப்பிட்டார்.
தன் முகம் ஒளியிழந்து காணப்பட்டதாகத் தன் ஆங்கில ஆசிரியர் கூறியபோதுதான் மன உளைச்சலில் தான் சிக்கியிருப்பதை அவர் உணர்ந்தார்.
இருப்பினும், படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலையில் மகள் இருக்கிறார் என்பதைத் தன் பெற்றோர் புரிந்துகொண்டு நடந்துகொண்டனர்.
"இந்த வாழ்க்கை என்னுடையதே அன்றி வேறொருவருடையது அல்ல என்பதை உணர்ந்தேன்," என்றார் அவர்.
மாணவர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் ஸ்ரீநிதி, சமூகவியல் துறையில் பயில விரும்புகிறார்.

