ஆ. விஷ்ணு வர்தினி
தொடக்கக் கல்லூரி வாழ்க்கை முழுக்க முழுக்க சுகமான ஓர் அனுபவம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இனிய நினைவலைகளையும் புதிய திறன்களையும் அது அளிக்க வல்லது என்பதே உண்மை. தொடக்கக் கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டில் எவ்வளவோ முட்டி மோதினாலும் கணிதப் பாடத்தில் சிறப்பாகச் செய்ய முடியவில்லை.
அந்தச் சிரமத்தை எதிர்கொள்ள நான் எடுத்த பெரும் முயற்சியே என்னைப் பின்னர் காப்பாற்றியது. முக்கியமாக, என்னுடைய ஆசிரியரிடம் கேள்விகள் கேட்டும் நண்பர்களின் உதவியை நாடியும் என்னால் தெளிவு பெற முடிந்தது.
இந்திய கலாசார மன்றத்திலும் கவிமாலை மாணவர் அணியிலும் தலைவராகப் பொறுப்பேற்ற எனக்கு, கொவிட்-19 சூழல் தந்த நெருக்கடிகளைக் கடக்கும் மனத் தைரியத்தை என் பெற்றோர் அளித்தனர். இத்தனை பொறுப்புகளுக்கு இடையே தொடர்ந்து எனக்கு ஊக்கமளித்த பெற்றோருக்கே நான் நன்றி சொல்ல வேண்டும்.
ஆசிரியர்களை நம்பியிருக்காமல் சுயமாகச் செயல்படும் திறனைத் தொடக்கக் கல்லூரி வாழ்க்கை தரும். குறுகிய காலகட்டத்தில் அறிவார்ந்த முடிவுகளை எடுக்கும் திறனை வளர்த்துக்கொள்ள தொடக்கக் கல்லூரி நாள்கள் எனக்கு உதவின.
மேல்நிலைத் தேர்வு நெருங்கும்போது கற்றதை மீண்டும் மறுபார்வையிடும் வேளையில் சலிப்புத் தட்டியது. நேரம் மெதுவாகக் கடந்து போவதாக உணர்ந்தேன். ஆனால், நண்பர்களும் சக மாணவர்களும் அந்தச் சவால்மிக்க காலகட்டத்தில் ஒருவருக்கொருவர் உதவி, நலன் பேணியது என்னை நெகிழ வைத்தது.
நான் எடுக்கும் முடிவுகளுக்கு நானே பொறுப்பு என்பதை என் தொடக்கக் கல்லூரிப் பயணம் உணர்த்தியது.
அறிமுகம் இல்லாதவர்களிடம் சென்று பேசும் தைரியத்தையும் நான் பெற்றேன்.
தமிழ் முரசு நாளிதழில் செய்தியாளராகப் பயிற்சி பெற்று வரும் நான், தொடக்கக் கல்லூரியில் கற்றுக்கொண்ட திறன்களைப் பயன்படுத்தி, பல்வேறு சூழ்நிலைகளைச் சமாளிக்கிறேன்.
விளைவுகள் எதுவானாலும் முயற்சியைக் கைவிடக்கூடாது என்று தொடக்கக் கல்லூரியில் நான் உணர்ந்ததைத் தற்போது செயல்படுத்தி வருகிறேன்.

