பேருந்து ஓட்டுநர்களிடையே அண்மையில் கொவிட்-19 தொற்று அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, ஏறக்குறைய 90 பேருந்துச் சேவைகளுக்கு காத்திருக்கும் நேரம் மூன்று நிமிடங்கள் வரை கூடியுள்ளது.
போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹோங் டாட் திங்கட்கிழமை (பிப்ரவரி 28) நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார். அத்தியாவசிய பேருந்துச் சேவைகள் தொடர்ந்து இயங்குவதை உறுதிசெய்யும் திட்டங்களின் ஒரு பகுதியாக, பேருந்துச் சேவைகளுக்கு இடையிலான இடைவெளி நீட்டிக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
கொவிட்-19 தொற்றுக்கு ஆளான பேருந்து ஓட்டுநர்களின் எண்ணிக்கை, மொத்த ஓட்டுநர் எண்ணிக்கையில் 5 விழுக்காட்டிற்கும் குறைவாக இருப்பதாக திரு சீ தெரிவித்தார்.
நிலப் போக்குவரத்து ஆணையமும் பொதுப் போக்குவரத்து நிறுவனங்களும் நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அவர் சொன்னார்.
"நிலப் போக்குவரத்து ஆணையமும் பொதுப் போக்குவரத்து நிறுவனங்களும் அதிக தேவையுடைய பேருந்துச் சேவைகளுக்கு முடிந்தபோதெல்லாம் கூடுதலான ஈரடுக்குப் பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்தும்," என்று திரு சீ கூறினார்.


