வர்த்தக, தொழில் அமைச்சர்: பணவீக்க நெருக்கடிகள் ஏறுமுகமாகும்
உக்ரேன் நெருக்கடி, சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி வாய்ப்புகளை மங்கவைத்து இருக்கிறது. அதிகரிக்கும் எரிசக்திச் செலவுகள் காரணமாக பொருள்களின் விலைகள் கூடும் நிலை ஏற்பட்டு இருக்கிறது என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் பணவீக்கத்திலும் ஏற்படக்கூடிய உண்மையான தாக்கத்தை இப்போதைக்கு மதிப்பிடுவது சிரமமான ஒன்று என்று கூறிய அவர், நிச்சயமில்லாத பல நிலவரங்களையும் சீர்தூக்கிப் பார்க்கையில் விரைவில் பணவீக்க நெருக்கடிகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்றார் அவர்.
"நம்முடைய பொருளியல் இறங்குமுகத்துக்குத் திரும்பும் ஆபத்துகளும் கணிசமாக அதிகரித்து இருக்கின்றன," என்று திரு கான் கூறினார்.
நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது உக்ரேன் போர் காரணமாக ஏற்படக்கூடிய பொருளியல் தாக்கம் பற்றி அமைச்சர் பேசினார்.
பொருளியல் இந்த ஆண்டில் 3% முதல் 5% வளரும் என்று சிங்கப்பூர் முன்னுரைத்து இருக்கிறது. மூலாதாரப் பணவீக்கம் 2% முதல் 3% வரைப்பட்டதாக இருக்கும் என்றும் அது கணித்துள்ளது.
உக்ரேன் பிரச்சினை காரணமாக சிங்கப்பூர் பொருளியலிலும் நிறுவனங்களிலும் ஏற்படக்கூடிய உடனடியான நேரடித் தாக்கத்தை இப்போதைக்குச் சமாளித்துவிடலாம் என்பதே சிங்கப்பூரின் மதிப்பீடாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருந்தாலும் உக்ரேன் பிரச்சினை முற்றுகிறது. அங்கு சூழ்நிலை மிக வேகமாக மாறக்கூடும் என்று திரு கான் எச்சரித்தார்.
உக்ரேன், சிங்கப்பூரில் இருந்து வெகுதொலைவில் இருந்தாலும் உக்ரேன் போர் காரணமாக நம் அனைவரிடத்திலும் உண்மையிலேயே கணிசமான அளவுக்குத் தாக்கம் ஏற்படும் என்று அமைச்சர் கூறினார்.
ரஷ்யா மீது உலக நாடுகள் பல தடைகளையும் விதிக்கின்றன. பொருள், சேவை விநியோகத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இவற்றின் காரணமாக உலக எரிபொருள் மற்றும் இதர பொருள்களின் விலை வரும் வாரங்களில் உயர்ந்துவிடும் என்றார் அவர்.
அனைத்துலக நிலவரங்களுக்கு சிங்கப்பூர் போன்ற சிறிய, திறந்த பொருளியல் நாடுகள் எளிதில் இலக்காகிவிடும் என்பதை உக்ரேன் நிலவரம் நினைவூட்டுவதாகக் கூறிய அமைச்சர், அத்தகைய உலக நெருக்கடிகளில் இருந்து தப்பித்து கொள்வதற்கான நமது அரணை பலப்படுத்த வேண்டியது முக்கியமானது என்றார்.
இதைச் செய்ய துடிப்புமிக்க, பலமுனைப்படுத்தப்பட்ட, மீள்திறன் கொண்ட பொருளியலை பலப்படுத்த வேண்டும்; பிணைப்புமிக்க, ஐக்கியமான சமூகத்தை வலுப்படுத்த வேண்டும் என்று திரு கான் குறிப்பிட்டார்.