எரிசக்தியைப் பெறும் வழிகளை சிங்கப்பூர் பன்முகப்படுத்த முனைந்துள்ள வேளையில், ஹைட்ரஜன், அணுமின்சக்தியைப் பெறுவதற்கான வழிகளை ஆராயவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வரவுசெலவுத் திட்டம் 2022 மீதான நாடாளுமன்ற விவாதத்தின் முதல் நாளான நேற்று ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டான் வூ மெங் இந்த யோசனையை முன்வைத்தார்.
சிங்கப்பூர் ஹைட்ரஜன் நடுவமாக விளங்கலாம் என்றும் அதற்கு முன்னர் ஹைட்ரஜன் சார்ந்த மின்சாரத் தயாரிப்பில் அது கால்பதிக்க வேண்டுமென்றும் எரிசக்திச் சேகரிப்பு ஆற்றலை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
உலகில் அணுப் பிளவு, அணுச் சேர்க்கை ஆகிய முறைகளில் அணு மின்சக்தி தயாரிக்கப்படுவதை சிங்கப்பூர் அணுக்கமாகக் கண்காணித்துவர வேண்டும் என்றார்.
சிங்கப்பூரின் மின்சாரத் தேவையில் 95 விழுக்காட்டிற்கும் மேல், இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், அதற்கான தேவை மேலும் தீவிரமாக அதிகரிக்கக் கூடும் என்று தெரிவித்தார்.
மின்சாரக் கார்களின் பயன்பாடு அதிகரிக்கையில் அது மேலும் அதிகரிக்கும் சாத்தியம் உண்டு என்றார் டாக்டர் டான். அதனால் எரிசக்தி பெறும் வழிகளைப் பரவலாக்குவதும் மற்ற தரப்புகளைக் காட்டிலும் முன்னதாகவே அதைத் தொடங்குவதும் முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.
எரிசக்தி மீள்திறன், எரிசக்திப் பாதுகாப்பு ஆகியவற்றுடன், கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும் அது உதவும் என்று டாக்டர் டான் கூறினார்.
சூரிய மின்சக்தி தயாரிப்பிலும் சில வரம்புகள் உண்டு என்றாரவர்.

